மும்பை: போலார்ட் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்று விட்டார்.
நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் டெண்டுல்கர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக டெண்டுல்கரும், தவனும் இறங்கினர். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெண்டுல்கர் 9 ரன்களில் வீழ்ந்தார். தவன் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்தவர்களில் அபேஷக் நய்யார் சற்று பொறுப்பாக ஆடி 22 ரன்களைக் குவித்த நிலையில் பீட்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ராயுடுவும், செளரப் திவாரியும் மகா பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடி ரன்களைக் குவித்தனர். இவர்களில் திவாரி சற்று வேகமாக ஆடினார். அதிலும் போலார்டுடன் இணைந்து இவர் வான வேடிக்கை காட்டினார்.
ராயுடு 40 ரன்களில் ஆட்டமிழந்தார். திவாரியும், போலார்டும் இணைந்த பின்னர்தான் மும்பையின் ரன் வேகம் அதிகரித்த்து. திவாரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்களை எடுத்தார். போலார்ட் 13 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார்.
இந்த இருவரின் ஆட்டத்தால் மும்பை அணி சரிவிலிருந்து மீண்டு 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களைக் குவிக்க முடிந்தது.
பின்னர் ஆட வந்த பெங்களூர் அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறியபடியே ஆடியது. எந்த பார்ட்னர்ஷிப்பும் நீடிக்கவில்லை. உத்தப்பா சற்று ஆடி 26 ரன்களைக் குவித்தார். ராஸ் டெய்லர் தனி மனிதராக போராடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்களை எடுத்தார். டிராவிடின் பங்கு 23 ரன்களாகும். மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.
இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களுடன் நின்று போனது பெங்களூர்.
பேட்டிங்கில் வெளுத்துக் கட்டிய போலார்ட், பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்களை வாரினார். ஆட்ட நாயகனாக போலார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மும்பை.
இந்த ஐபிஎல் தொடரில் அரை இறுதிப் போட்டிக்கும் முதன் முதலில் மும்பைதான் தகுதி பெற்றது. தற்போது இறுதிப் போட்டிக்கும் அதுவே முதலில் நுழைந்துள்ளது.
கடந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் போன அணி மும்பை. தற்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் அது பிரவேசித்துள்ளது.
அதேசமயம், கடந்த முறையும் இறுதியில் போட்டியில் தோல்வியைச் சந்தித்த பெங்களூர் அணி, இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.