ஐபிஎல் அணிகள் செயலால் காயத்துடன் ஆடும் இந்திய வீரர்கள்.. அதிர வைத்த பிசிசிஐ அதிகாரி
மும்பை: ஐபிஎல் அணிகளின் அழுத்தத்தால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் காயத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாட கட்டாயப்படுத்தப்படுவதாக பிசிசிஐ செயல்பாட்டு மையத்தின் (CoE) அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். இது குறித்து செய்தியாளர் விபுல் காஷ்யப் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் தங்களுக்கு காயம் இருந்தாலும் அதையும் மீறி விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிரான்சைஸ் அணிகளின் அழுத்தம் மற்றும் நிதி சார்ந்த காரணங்களே இதற்கு காரணம். அதன் பிறகு, காயமடைந்த வீரர்களை பிசிசிஐ பிசியோக்களிடம் அந்த ஐபிஎல் அணிகள் ஒப்படைத்து விடுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 3 மாதங்கள் வரை நடைபெறும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறுவதால் வீரர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். கடந்த 2026 ஐபிஎல் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் மற்றும் ரியான் பராக் போன்ற இந்திய வீரர்கள் காயமடைந்தனர்.

இதில் ஹர்திக் பாண்டியா 2026 ஐபிஎல் தொடக்கத்திற்குப் பிறகு இன்னும் முழுமையாக குணமடையாமல் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்திக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதே போல் வாஷிங்டன் சுந்தர், பிரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் காயமடைந்த வீரர்கள் பட்டியலில் உள்ளனர். அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறுவதும், வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்காததுமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதால், அவர்களது உடற்தகுதியை மீட்டெடுப்பதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்திய அணி வீரர்களான பும்ரா, சாய் சுதர்சன், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் காயத்தால் இலங்கை டெஸ்ட் தொடரில் ஆட முடியாத நிலை உள்ளது. அதற்கு பிசிசிஐ செயல்பட்டு மையத்தில் இருக்கும் பிசியோதெரபிஸ்ட் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அங்கிருந்து ஐபிஎல் அணிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

