ஐபிஎல்லின் 2 புதிய அணிகள் .. டிசம்பர் 8ம் தேதி ஏலம்
மும்பை: ஐபிஎல் லீக்கில் புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8ம் தேதி தெரிய வரும்.
மேலும் ஐபிஎல்லில் சேர்க்கப்படும் நகரங்களுக்கான பரிந்துரைப் பட்டியலிலிருந்து ஜெய்ப்பூரையும், கொச்சியையும் இன்று நடந்த பிசிசிஐ வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் நிராகரித்து விட்டனர்.
இந்த இரு நகரங்கள் தவிர மற்ற நகரங்கள் டிசம்பர் 8ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி சுப்ரீம் கோர்ட் குழுவால் 2 ஆண்டு காலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதிலாக இந்த இரண்டு புதிய அணிகளும் தேர்வு செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், புதிய அணிகளை முடிவு செய்யும் பணிகள் நவம்பர் 15ம் தேதி தொடங்கும். விருப்பமுள்ளோர் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஏலத்தில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
அணிகளை நிர்மானிக்கும் நகரங்களின் பட்டியலிலிருந்து ஜெய்ப்பூரும், கொச்சியும் நீக்கப்பட்டு விட்டது. 9 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து 2 நகரங்கள் தேர்வு செய்யப்படும். டிசம்பர் 8ம் தேதி ஏலம் நடைபெறும். நேரடி ஏலமாகும் இது என்றார் சுக்லா.


Click it and Unblock the Notifications