டெல்லி: ஐபிஎல் கொச்சி அணியின் உரிமையாளர்கள் குறித்து பெரும் குழப்பமும், அமளியும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது உரிமையாளர்கள், பங்குதாரர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது உரிமையாளர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாம்பே பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அளித்துள்ள அறிக்கையில், இந்தியன் பிரீமியர் லீக் அணிகளின் பங்குதாரர்கள் குறித்து மீடியாக்களில் வரும் செய்திகளைத் தொடர்ந்து, ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் நிலையை தெளிவுபடுத்த விழைகிறோம்.
டெக்கான் சார்ஜர் அணியின் உரிமையாளர் டெக்கான் சார்ஜர்ஸ் ஸ்போர்டிங் வெஞ்சர்ஸ் லிமிட்டெட் நிறுவனமாகும். டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் இது.
டெக்கான் சார்ஜர்ஸ் ஸ்போர்டிங் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராக வி.சங்கர் இருக்கிறார். இதர இயக்குநர்களாக வெங்கட்ராம் ரெட்டி, பி.கே.ஐயர், என்.கிருஷ்ணன், சுகுமார் ரெட்டி, ஜி.குமார் ஆகியோர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.