ரூ.20,000 கோடி.. டாப்பில் நிற்கும் மும்பை அணி.. அடுத்த இடத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே.. பட்டியலில் யார்?
மும்பை: ஐபிஎல் தொடரில் ஆடி வரும் 10 அணிகளில் மும்பை அணியின் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியை எட்டி இருக்கிறது. அதுமட்டுல்லாமல் ஒவ்வொரு அணியின் மதிப்பும் ரூ.14,292 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டதாகவும், மும்பை அணியை தொடர்ந்து ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் தலா 5 கோப்பைகளை வென்றுள்ளன. அதேபோல் கேகேஆர் அணி 3 முறையும், ஐதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் தலா 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக மதிப்புமிக்க அணிகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20,008.8 கோடி மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி ரூ.17,626.8 கோடி மதிப்புடன் 2வது இடத்திலும், சிஎஸ்கே அணி ரூ.16,674 கோடி மதிப்புடன் 3வது இடத்திலும், கேகேஆர் அணி ரூ.16,483.44 கோடி மதிப்புடன் 4வது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல் டெல்லி அணியின் மதிப்பு ரூ.16,197.6 கோடியாக இருக்கிறது.
தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.15,721.2 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.15,435.35 கோடியாகவும், குஜராத் அணியின் மதிப்பு ரூ.15,054.24 கோடியாகவும், பஞ்சாப் அணியின் மதிப்பு ரூ.14,577.84 கோடியாகவும் உள்ளது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட நாளில் இருந்த மதிப்பையும், தற்போதைய மதிப்பையும் ஒப்பிட்டால், 1,800% உயர்ந்துள்ளது.
இந்த காலத்தில் என்பிஏ லீக்கின் மதிப்பு 1,700% மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஐபிஎல் அணிகளின் பெரும்பாலான வருவாய் ஒளிபரப்பு உரிமையில் இருந்தே வருகிறது. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி என்று ஒளிபரப்புவது ஐபிஎல் தொடரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய லாபமாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு அணியும் ரூ.476.4 கோடியில் இருந்து ரூ.523 கோடி வரை பெற்று வருகின்றன.
ஒளிபரப்பு உரிமையின் மூலம் கிடைக்கும் வருவாயில் 90% 10 அணிகளுக்கும் சரிக்கு சமமாக பிரித்து கொடுக்கப்படும். மீதமுள்ள 10% வருவாய், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகளுக்கும் ஏற்ப பிரித்து வழங்கப்படும். இதில் பிசிசிஐ தயாரிப்பு செலவுகளை பிடித்து கொள்ளும். அதேபோ டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப், விளம்பரங்கள் மூலமாக மட்டுமே ஒவ்வொரு அணியும் ரூ.708.9 கோடி வருவாய் ஈட்டுகின்றன.
ஐபிஎல் தொடர் ஏலம் மூலமாக வீரர்களை கட்டுப்படுத்துவதால், ஒவ்வொரு அணியும் அதிக லாபம் ஈட்டுகிறது. இதனால் உலகிலேயே அதிக லாபம் வரும் லீக் தொடராக ஐபிஎல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 30% லாபத்தை ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வருவதால், உரிமையாளர்களும் உற்சாகமாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
