சென்னை : ராஜஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹலிடம் மட்டும் பேட்ஸ்மேன்கள் பேசவே கூடாது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
17வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அந்த அணியின் பவுலிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த சீசனில் பேட்ஸ்மேன்களை திணற வைக்க கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் ஒய்டாக வீசி புதிய ஆயுதத்துடன் களமிறங்கியுள்ளார். அதற்கேற்ப ஃபீல்ட் செட் அமைத்து விக்கெட்டையும் வீழ்த்துவது ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகத்தை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 149 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், இதுவரை 193 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் இந்த ஐபிஎல் தொடரிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு பேசுகையில், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும், சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹலிடம் மட்டும் பேசவே கூடாது.
ஏனென்றால் சாதாரணமாக சாஹல், அவருடன் உரையாடுபவரின் மனநிலையை எளிதாக புரிந்து கொள்பவர். குறிப்பாக போட்டிக்கு முன்பாக அவருடன் பேசும் பட்சத்தில், நிச்சயம் அவர் நம்மை சிரமத்திற்கு உள்ளாக்குவார். அவர் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாகவே செஸ் விளையாட்டு வீரர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர். இப்போதும் தீவிரமாக செஸ் விளையாட்டை பின்பற்றுவார்.
இதனால் எளிதாக நமது மனநிலையை அறிந்து நமக்கு எதிராகவே ஆட்டத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் வல்லவர் சாஹல் தான் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான் அந்தஸ்துக்கு முன்னேறியுள்ள சாஹல், இந்திய டி20 அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார். அண்மையில் கூட பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் சாஹல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.