ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. அதற்கு விடை கிடைக்கும் விதமாக தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைத்திருக்கிறது.
ஐபிஎல் 17ஆம் சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் இந்த சீசனில் எந்த வீரரை தக்க வைத்துக் கொள்கிறோம். எந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்று ஒவ்வொரு அணிகளும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பிசிசிஐக்கு பட்டியலை அனுப்ப வேண்டும்.

இந்த நிலையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் சிஎஸ்கே விடுவித்தவர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
இதன் மூலம் அடுத்த சீசனில் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த சீசனில் ஒருவேளை விளையாடவில்லை என தோனி முடிவெடுத்து இருந்தால், அதனை இப்போதுதான் சொல்லி இருக்க முடியும். ஏனென்றால் அதற்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே மினி ஏலத்தில் எடுத்திருக்கும்.இந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை என்பதால் அவர் கண்டிப்பாக அடுத்த சீசனில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா தோனியின் பெயர் விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லாதது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். இதன் மூலம் தோனி அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனினும் இதனை நாம் முடிவு எடுக்கக் கூடாது.
எப்படி டாஸ் வீசும்போது தோனி சர்ப்ரைஸ் கொடுப்பாரோ அதேபோல் ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் தன்னுடைய முடிவை தோனி அறிவிக்கலாம். எனினும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவதாக இருந்தாலும் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். தன்னுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஓய்வு கூட தோனி எடுத்துக் கொள்ளலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
தோனி தொடர்ந்து விளையாடுவதில்லை என முடிவு எடுத்தால், 2022ஆம் ஆண்டில் நடந்தது போல் ஜடேஜா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பிளான் பி படி தோனி ஓய்வில் இருக்கும் போட்டியில் ஜடேஜாவோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டோ கேப்டனாக செயல்படுவார்கள்.