ஆக்லாந்து : உலகம் முழுவதும் டி20 தொடர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கிரிக்கெட்டும், கால்பந்து போல் லீக் தொடர்களை சுற்றியே நடைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு விளையாடுவதற்கு பதில் இது போன்ற லீக் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கு காரணம் நாட்டுக்காக விளையாடும்போது கிடைக்கும் ஊதியத்தை விட,இதுபோன்ற லீக் தொடரில் விளையாடும் போது அதிகமாக கிடைக்கின்றது. இந்த நிலையில் இதில் தற்போது பெரியதாக பாதிக்கப்பட்டிருப்பது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தான்.

ஏற்கனவே அந்த அணியின் முன்னணி வீரர்கள் தங்களுக்கு ஆண்டு ஒப்பந்தம் வேண்டாம் என்று விலகி விட்டார்கள். அண்மையில் நியூசிலாந்து அணியின் ஸ்டார் வீரர் வில்லியம்சன் தமக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டாம் என்று விலகி இருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் அடுத்த கட்டத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கான்வே தமக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டாம் என அறிவித்திருப்பது அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கான்வேவை, சமாதானப்படுத்தி வில்லியம்சனுக்கு போட்ட அதே ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. அதாவது நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு வேறு ஏதேனும் டி20 தொடரில் ஆடுவதற்கு விருப்பம் இருந்தால் தாராளமாக சென்று கொள்ளலாம்.
இதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. இதில் வில்லியம்சன் கையெழுத்திட்ட நிலையில் தற்போது கான்வேவும் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு இருக்கிறார். இதன் மூலம் இனி கான்வே, நியூசிலாந்து அணி எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் அதில் பங்கேற்காமல் டி20 லீக் தொடரில் சென்று விளையாடலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கான்வே,முதலில் எனக்கு ஆதரவளித்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது தான் என் நோக்கமாக இருக்கின்றது. நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகவும் உள்ளது.
அதே சமயம் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என தாம் முடிவெடுத்தது முழுக்க முழுக்க என்னுடைய குடும்பத்திற்காக தான். என்னுடைய குடும்பத்திற்கு எது சரியோ அதைத்தான் நான் செய்திருக்கின்றேன் என்று கான்வே கூறியுள்ளார். இதனால் காண்வே, வில்லியம்சன் போன்ற வீரர்கள் இனி எந்த டி20 தொடரிலும் விளையாட செல்வார்கள்.