"2 மாசத்துக்கு 150 கோடி சம்பளம்".. 2030-இல் மாறப் போகும் ஐபிஎல்.. லலித் மோடியின் அதிரடி கணிப்பு
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டும் என்றும், 2030-ம் ஆண்டில் ஒரு வீரரின் ஊதியம் 150 கோடி ரூபாயைத் தாண்டும் என்றும் ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். வருங்காலத்தில் நட்சத்திர வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் எனும் பட்சத்தில் அப்போது வைபவ் சூர்யவன்ஷி அந்த சம்பளத்தை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான லலித் மோடி, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். சமீபத்தில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனுக்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரின் எதிர்கால நிதிநிலை குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தலைசுற்ற வைக்கும் சம்பளம்
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இன்னும் 4 ஆண்டுகளில் அதாவது 2030-ம் ஆண்டில், ஒரு அணியின் டாப் வீரர்கள் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்று லலித் மோடி கூறியுள்ளார். "அப்போது ஒரு வீரர் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 8 முதல் 9 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். ஒரு சீசனில் 16 போட்டிகளில் விளையாடும் ஒரு நட்சத்திர வீரர், 15 முதல் 16 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 150 கோடி ரூபாய்) தாராளமாகப் பெறுவார். இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

932 கோடி பட்ஜெட்
ஐபிஎல் அணிகளின் மதிப்பு தற்போது தலா 2 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது 2030-ம் ஆண்டில் இரட்டிப்பாகும். இதனால் ஒரு அணியின் ஒட்டுமொத்த வீரர்களுக்கான பட்ஜெட் (Player Purse) மட்டும் 932 கோடி ரூபாயாக உயரும். வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருவாய் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் என அவர் விளக்கியுள்ளார்.
நாட்டை விட ஐபிஎல் முக்கியம்
இந்த இமாலய வருவாய் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடருக்கே முன்னுரிமை அளிப்பார்கள் என்றும் லலித் மோடி எச்சரித்துள்ளார். "ஒரு வீரர் தனது நாட்டுக்காக 85 நாட்கள் விளையாடி 8 கோடி ரூபாய் சம்பாதிப்பதா அல்லது வெறும் 2 மாதம் ஐபிஎல் தொடரில் விளையாடி 150 கோடி ரூபாய் சம்பாதிப்பதா என்ற நிலை வரும்போது, அவர் தனது குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரையே தேர்ந்தெடுப்பார். 150 கோடி ரூபாய் கிடைக்கும் இடத்தில் விளையாடச் சொல்லித்தான் அந்த வீரரின் குழந்தைகளே வற்புறுத்துவார்கள்" என்று யதார்த்தமான ஒரு காரணத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
உலகிலேயே மற்ற அனைத்து லீக் தொடர்களுக்கும் தாய் போன்றது ஐபிஎல் தான் என்று குறிப்பிட்ட லலித் மோடியின் இந்தக் கணிப்பு, கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2030-ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர்கள் உலகப் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், 150 கோடி எல்லாம் சாத்தியமா?


Click it and Unblock the Notifications