
ராஜ்கோட் : மாக்ஸ்வெல் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக வந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில், 2017 ஐபிஎல் போட்டிகளின் போது, அவர் செய்த ஒரு ரகசிய காரியம் தற்போது தெரிய வந்துள்ளது.
தன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் வந்ததையடுத்து, அது தொடர்பாக விளக்கமளித்த மாக்ஸ்வெல், ஐபிஎல் தொடர்களின் போது தனக்கு தெரிய வந்த தவறான விஷயங்களை குற்றத் தடுப்பு பிரிவுக்கு தான் விரிவாக தெரிவித்ததாக கூறினார். ஆனால், தற்போது அவர் கூறியதற்கு நேர்மாறாக, ஒரு செய்தி வந்துள்ளது. 2017 ஐபிஎல் தொடரின் போது எதிரணியின் சார்பில் நடத்தப்பட்ட பார்ட்டிக்கு ரகசியமாக சென்றது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் 2017இல், ராஜ்கோட்டில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடியது. அன்று நடந்து முடிந்த போட்டிக்கு பின், குஜராத் அணியின் விளம்பரதாரர் நடத்திய இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளார், மாக்ஸ்வெல்.
ஐபிஎல் அணி வீரர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் அணி மேலாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அணி நிர்வாகம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையெனில், பாதுகாவலர்களை அனுப்ப வேண்டும். ஆனால், இது எதையும் பின்பற்றாத மாக்ஸ்வெல், அணியின் மேலாளர் உட்பட யாருக்கும் தெரியாமல் எதிரணியின் பார்ட்டிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அவர் பார்ட்டிக்கு பின் சைக்கிளில் திரும்பியதாகவும், போதையில் இருந்ததால் சாலையில் தடுமாறி விழுந்து கிடந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், மாக்ஸ்வெல் தங்கியிருந்த இடத்தில் சேர்த்திருக்கிறார். அடுத்த நாள் இந்த சம்பவம் குறித்து அணி நிர்வாகத்திற்கும், பிசிசிஐ-க்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் பற்றி கூறிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “இந்த சம்பவத்தை நாங்கள் வெளியில் கூறவில்லை. ஒருவேளை கூறியிருந்தால் இது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கும். இந்த சம்பவத்தில், மாக்ஸ்வெல் அணி மேலாளருக்கும், பாதுகாவலர்களுக்கும் தெரியாமல் சென்றுள்ளார். நியாயமாக அவர் வெளியில் சென்றிருக்கவே கூடாது. நிச்சயம் வெளியில் செல்ல வேண்டும் என்றால், தகுந்த பாதுகாப்போடு மட்டுமே சென்று இருக்க வேண்டும். ஆனால், அவர் தனியாக சென்று விட்டு, மோசமான நிலையில் தனியாகவே திரும்பி இருக்கிறார்” என்றார்.
எல்லாவற்றையும் குற்றத் தடுப்பு பிரிவுக்கு தெரிவித்த மாக்ஸ்வெல், இந்த விஷயத்தை அவர்களுக்கு தெரிவிக்கவில்லையா? இன்னும் ஐபிஎல்-இல் என்னென்ன வெளியில் தெரியாத ரகசியங்கள் உள்ளதோ?