மெய்யப்பன் எபக்ட்... மூடு விழா காணுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
மும்பை குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதால் அவரது மாமனார் என்.சீனிவாசனுக்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சிக்கல் வரும் என்று தெரிகிறது.
சட்டவிரோத பெட்டிங் மற்றும் மோசடிப் புகார் தொடர்பான வழக்கில் மும்பை போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சீனிவாசன் மருமகன் மெய்யப்பன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் சிக்கலாகியுள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் பலர் அணி திரள ஆரம்பி்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அணியை நீக்குங்கள்
இவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் அமைப்புக்கும் அவப் பெயர் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அந்த அணியை நீக்க வேண்டும் என வலியுறுத்தப் போகிறார்களாம்.

சென்னை கூட்டத்தில் வெடிக்கும்
சென்னையில் செப்டம்பர் 29ம் தேதி வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்போது இந்த விவகாரம் வெடிக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

அவதூறு ஏற்பட்டால் டிஸ்மிஸ் செய்யலாம்
ஐபிஎல் அணிகளுக்கான ஒப்பந்த விதி 11.3ன்படி ஒரு அணியைச் சேர்ந்த உரிமையாளர் அல்லது அணியுடன் தொடர்புடையவரால் அணிக்கோ அல்லது ஐபிஎல் அமைப்புக்கோ களங்கம் ஏற்படுவதாக இருந்தால் அந்த அணியை நீக்க முடியும், கலைக்க முடியும். எனவே அந்த அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸை நீக்க சிலர் கச்சை கட்டி கிளம்பியுள்ளனராம்.

பிரின்சிபல்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குழு பிரின்சிபல் என்ற போஸ்ட்டிங்கில் இருந்தவர் மெய்யப்பன். ஆனால் பெட்டிங் சர்ச்சையில் சிக்கியதும், அவருக்கும், சென்னை அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீனிவாசன் தரப்பு கூறியது. ஆனால் மெய்யாலுமே மெய்யப்பன், சென்னை அணியுடன் தொடர்புடையவர் என்பதற்கான ஆதாரங்களை மும்பை போலீஸார் திரட்டி விட்டனர்.

சிக்கல் வரலாம்
எனவே மெய்யப்பனைக் காரணம் காட்டி சீனிவாசனுக்கும், சென்னை அணிக்கும் சிக்கல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications