ஹைதராபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் உம்ரான் மாலிக் மட்டுமே ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத வீரராக இருக்கிறார். அவரது பெற்றோர் அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், ஹைதராபாத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?
2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்திய ராணுவம் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ஆனால், நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் அவரவர் இல்லங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் பகுதி பகுதியாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
அதே சமயம் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர். ஆனால், ஜம்முவை சேர்ந்த உம்ரான் மாலிக் மட்டுமே தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.
அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு காயம் இருந்ததால், போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணியுடன் பயணிக்க அனுமதித்தது. மேலும் அவரது காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான உதவிகளையும் செய்து வந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோத இருந்தது. அதன் காரணமாக ஹைதராபாத்தில் அந்த அணியின் வீரர்கள் முகாமில் இருந்தனர். அங்கு தான் உம்ரான் மாலிக்கும் இருந்தார். இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு திரும்பிய நிலையில், உம்ரான் மாலிக் மட்டும் ஹைதராபாத்தில் இருக்கிறார். இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்முவில் நிலைமை சீரடைந்தால் மட்டுமே உம்ரான் மாலிக் தனது ஊருக்குத் திரும்ப முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரை விரைவில் துவங்குவதற்கான முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.