ஐபிஎல் வர்த்தக மதிப்பு சந்தை கடும் சரிவு.. தோனி ஓய்வு தொடர்பான அச்சம் காரணமா? என்ன நடந்தது?
மும்பை : உலகில் மிகவும் பணக்கார விளையாட்டு கிரிக்கெட் தொடராக ஐபிஎல் கருதப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெறும் என் எஃப் எல் என்ற தொடருக்கு பிறகு ஐபிஎல்க்கு தான் அதிக மவுஸ் இருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் பெருமளவு லாபத்தை பிசிசிஐ பார்த்து வருகிறது.
ஐபிஎல் தொடரின் வர்த்தக மதிப்பு உயர்ந்து கொண்டு சென்றது என்ற செய்தியை தான் நாம் பார்த்தோம். ஆனால் உண்மையில் ஐபிஎல் தொடரில் சந்தை மதிப்பு குறைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐ பி எல் மதிப்பு சுமார் 10.6 சதவீதம் குறைந்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டன் பதவியை இழந்த காரணம் மற்றும் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அவர் ஓய்வு பெற போகிறார் என்று வெளியான செய்தி போன்றவை ipl தொடரில் மதிப்பு சரிய காரணமா என்று விவாதம் எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் இது காரணம் அல்ல. இது தொடர்பாக டி அண்ட் பி அட்வைஸரி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐபிஎல் தொடரில் மதிப்பு 2023 ஆம் ஆண்டு பொறுத்தவரையில் 92,500 கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால், தற்போது 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மதிப்பு 82, 700 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட் தொடர்பான எந்த விவகாரங்களும் கிடையாது. மாறாக வர்த்தகத்தில் நடைபெற்ற மாற்றங்கள் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய லாபம் என்றால் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையாகும்.
இது ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 48 ஆயிரத்து 930 கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதனை ஸ்டார் மற்றும் வியாக்காம் 18 நிறுவனம் உரிமத்தை வைத்திருக்கிறது. தற்போது இந்த இரண்டு நிறுவனமும் ஒரே நிறுவனமாக இணைய இருக்கிறது. இதனால் அடுத்த ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்கும் போது, ஏலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழல் ஏற்படும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து இருப்பதாக டி அண்ட் பி அட்வைஸரி குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் உலக அளவில் பிரபலமான அமேசான், ஆப்பிள், நெட்பிளிக்ஸ், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஐபிஎல் உரிமத்தை வாங்க முன்வருவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் என்பிஏ, என் எஃப் எல், இ பி எல் போன்ற விளையாட்டு தொடர்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை உரிமத்தை வாங்கினால் அந்தத் தொகையை அவர்கள் மீண்டும் எடுப்பதற்கு கடும் சிரமப்பட வேண்டும்.
ஏனென்றால் வெளிநாடுகளில் ஒரு தொடரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கென தனி கட்டணத்தை செலுத்தினால் போதும். ஆனால் இங்கு கட்டணத்தை சிறிய அளவு செலுத்தினாலும், பெருமளவு விளம்பரம் மூலம் தான் வருமானம் வரும் வகையில் இந்தியாவில் வர்த்தக டிசைன் இருக்கிறது. இதன் காரணமாக தான் உலக அளவிலான ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்கள் ஐபிஎல் தொடரை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் இந்திய நிறுவனங்களில் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இரண்டு போட்டி நிறுவனமான டிஸ்னி, ஸ்டார் மற்றும் வியாக்ரம் 18 ஒன்றாக இணைந்திருப்பதன் மூலம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிம தொகையை ஏலத்தில் எடுக்க போட்டி பெரும் அளவில் இருக்காது. தற்போது இந்த நிலை ஏற்பட ஸ்டார் டிஸ்னி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு பிசிசிஐ வழங்கிய ஏகபோகம் மரியாதை தான் காரணம்.
மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எந்த ஒரு கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையும் வழங்காமல் பிசிசிஐ, இந்த இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அனைத்தும் வழங்கியது.
தற்போது அவர்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டதால் தற்போது மார்க்கெட்டில் வாங்குவதற்கு ஆளே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் மதிப்பு கடும் சரிவை சந்திக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications