சென்னை, ராஜஸ்தானுக்குப் பதில் புது அணிகளைத் தேர்வு செய்கிறது பிசிசிஐ... ஜூலை 19ம் தேதி ஏலம்
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவற்றுக்குப் பதில் புதிய அணிகளைத் தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஏலம் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது.
மும்பையில் இந்த ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலத்தின்போது சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் பதில் புதிதாக இரு அணிகள் தேர்வு செய்யப்படும்.
உச்சநீதிமன்றம் அமைத்த முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டி நேற்று ஐபிஎல் போட்டிகளில் சென்னையும், ராஜஸ்தானும் 2 ஆண்டுகள் விளையாடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பிசிசிஐயும், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவும் இறங்கியுள்ளன.

அவசர ஆலோசனை
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் மட்ட நிர்வாகிகள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூடுகிறது
விரைவில் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த தடை உத்தரவுகளால் ஏற்படப் போகும் சிக்கல்கள், பாதிப்புகள் குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர்.

புது ஏலம்
இதுகுறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நீதிபதி கமிட்டியின் உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பொதுவாக ஆலோசிக்கப்பட்டது. விரைவில் உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முறைப்படி ஆலோசிப்போம். புதிய அணிகள் தேர்வுக்கான ஏலமும் நடைபெறவுள்ளது. ஜூலை 19ம் தேதி மும்பையில் இது நடைபெறலாம் என்றார்.

3 முக்கிய விஷயங்கள்
இந்தக் கூட்டத்தின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உறுப்பினர்களின் முறையான கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

புது நிறுவனங்களை அனுமதிக்கலாமா
தற்போது ஏற்பட்டுள்ள 2 அணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப நடத்தப்படும் ஏலத்தில் புதிய நிறுவனங்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறதாம்.

2 அணி வீரர்களை மட்டும் ஏலத்தில் விடலாமா
அடுத்து, தற்போது நிராதரவாக விடப்பட்டுள்ள 2 அணிகளின் வீரர்களை மட்டும் ஏலத்தில் விடலாமா அல்லது மொத்தமாக புதிய வீரர்கள் ஏலத்தை நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

சென்னை அணியின் புதிய அவதாரம்
3வது விஷயம், கடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்திடமிருந்து விலக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பரிசீலிக்கலாமா, சட்டரீதியாக அது சரியாக இருந்தால் சென்னையைத் தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாம். ஆனால் சென்னைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இது சாத்தியமில்லை என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

விற்பதில் சிக்கல்
இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை இப்போதுள்ள அதே நிலையில், அதே பெயரில் யாரும் வாங்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் தற்போது உள்ள சட்டச் சிக்கல்கள் கூடவே வரும், மேலும் பெயரும் கெட்டுப் போய் விட்டது என்பதால் இதே நிலையில் இரு அணிகளையும் யாரும் வாங்க முன்வர மாட்டார்கள் என்கிறார்கள்.

45 வீரர்களின் எதிர்காலம்
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியில் மொத்தமாக 45 வீரர்கள் உள்ளனர். இவர்களை வேறு அணிகளுக்குப் பிரித்து விட வேண்டியுள்ளது. எனவே ஒரு மினி வீரர்கள் ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது.

மொத்தமாக ஏலம் நடைபெற வாய்ப்பு
அதேசமயம், பெரிய பெரிய வீரர்கள் இரு அணிகளிலும் உள்ளனர் என்பதால் அவர்களை எடுக்க கடும் போட்டி ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அனைத்து வீரர்களையும் மொத்தமாக சேர்த்து மறு ஏலம் நடைபெறும் வாய்ப்பும் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications