மாபெரும் வரலாற்று வெற்றி.. தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட அடேர் சகோதரர்கள்.. அயர்லாந்து அபாரம்
அபுதாபி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவே அயர்லாந்து அணியின் முதல் டி20 போட்டி வெற்றி ஆகும். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அயர்லாந்து அணியின் அடேர் சகோதரர்கள் தான்.
ஒருவர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். மற்றொருவர் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்தது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அடேர் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்று விகிதத்தில் இருவரும் அதிரடியாக ரன் சேர்த்தனர். பால் ஸ்டிர்லிங் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். 7 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார்.
ரோஸ் அடேர் 58 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் 5 ஃபோர் மற்றும் 9 சிக்ஸ் அடித்து தென்னாப்பிரிக்க அணியை கதறவிட்டார். அதன் பின் அயர்லாந்து அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. டாக்ரேல் மட்டுமே தாக்குப்பிடித்து 13 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.
அதனால், 200 ரன்கள் குவிக்கும் வாய்ப்பை அயர்லாந்து இழந்தது. எனினும், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்திருந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் லுங்கி நிகிடி சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். வியான் முல்டர் 2 விக்கெட்கள் வீழ்த்திய போதும் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்து இருந்தார்.
அடுத்து 196 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினர். ரியான் ரிக்கல்டன் 22 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மேத்யூ பிரீட்ஸ்கே 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த அனைத்து தென்னாப்பிரிக்க வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக ஆட்டம் இழந்து சென்றனர். இதை அடுத்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா அணி. 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. மேலும், முதன்முறையாக தென்னாப்பிரிக்கா அணியில் டி20 போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது. அயர்லாந்து அணியின் பந்து வீச்சில் மார்க் அடேர் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். க்ரஹாம் ஹ்யூம் 4 ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications