அயர்லாந்தை அடித்து நொறுக்கி டி20 தொடரை வென்ற இந்தியா.. ராகுல், ரெய்னா, குல்தீப் கலக்கல்
Recommended Video

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி, 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில், நடைபெற்றது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கார்த்திக் களம் கண்டார். இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். கோஹ்லி 9 ரன்களில் வெளியேறினார். இதைடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்து அதிரடி காட்டினார்.
ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் ஷர்மா டக்-அவுட். சுரேஷ் ரெய்னா 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மணிஷ் பாண்டே - ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் பாண்டியா அதிரடியாக விளையாடினார். 9 பந்துகளில் 4 சிக்சர், 1 பவுண்டரி உதவியுடன் 32 ரன்களும், மணிஷ் பாண்டே 20 பந்துகளில் 21 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
அதைத்தொடர்ந்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது,12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications