ஐபிஎல் ஏலம்.. புரியாத கோலம்.. 16.25 கோடிக்கு ஒர்த்தா க்றிஸ் மோரிஸ்?
சென்னை: அதென்னய்யா பொசுக்குன்னு இத்தனை கோடி கொட்டி எடுத்துட்டீங்கன்னு க்றிஸ் மோரிஸே இந்நேரம் புலம்பிக் கொண்டிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஐபிஎல் ஏலத்தின் போது, சில பல ஷாக்குகளை நாம் கண்டதுண்டு. ஆனால், இந்த ஷாக்கு வேற லெவல் என்றால் மிகையாகாது. யுவராஜ் சிங்குக்கு 16 கோடி கொடுப்பட்டதே, ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையாகும்.
அதை இன்று முறியடித்துள்ளார் க்றிஸ் மோரிஸ். 16.25 கோடி கொடுத்து அவரை வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

முறியடித்த மோரிஸ்
அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலை போன வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் மோரிஸ் பெற்றுள்ளார். கடந்த 2020 சீசனில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை 15.50 கோடிக்கு கொல்கத்தா எடுத்திருந்ததே ஒரு வேகப்பந்து வீச்சாளரின் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதையும் மோரிஸ் முறியடித்துள்ளார்.

பலரது கேள்வி
ஆனால், இந்த தொகைக்கு மோரிஸ் ஒர்த்தா என்பது பலரது கேள்வி. ரைட் ஆர்ம் பாஸ்ட் பவுலரான மோரிஸ் இதுவரை 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 551 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 23.95. ஸ்டிரைக் ரேட் 157.87. பந்துவீச்சில் 80 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், ஓவருக்கு 7.81 ரன்கள் கொடுத்திருக்கிறார்.

அசராத மோரிஸ்
ஒரு டீசண்ட்டான ஆல் ரவுண்டரான மோரிஸின் மிகப்பெரிய பலம் எதற்கும் அசர மாட்டார். அதாவது, எதிரணி பேட்ஸ்மேன் இவரது பந்துகளை தொடர்ந்து மூன்று முறை சிக்ஸருக்கு அனுப்பினாலும், நான்காவது பந்தை பதட்டமின்றி வீசும் பக்குவம் கொண்டவர்.

அபார டெத் ஓவர்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடிய போட்டிகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால், அத்தனை போட்டியிலும் தனது முழு பங்களிப்பை இவர் வெளிக்காட்டி இருப்பதை காண முடியும். குறிப்பாக டெத் ஓவர்களில் ஸ்டெம்ப்புகளை குறிவைக்கு இவரது பந்துவீச்சில் அத்தனை வேகம் இருக்கும்.

எந்த நம்பிக்கையில்
ஆனால், இதற்கு 16.25 கோடி ஒர்த்தா என்று கேட்டால் அவரே அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதே உண்மை. காயம் தான் இவரது மைனஸ். அடிக்கடி காயத்தால் சிக்குவதால், நிலையாக இவரால் அணிக்கு பங்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. கடந்த 2020 சீசனில் கூட இவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கிட்டத்தட்ட ஓராண்டு இவர் பெரிதாக இந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை. அப்படி இருக்கையில், எந்த நம்பிக்கையில் இவரை நம்பி இத்தனை கோடிகளை ஆர்ஆர் நிர்வாகம் முதலீடு செய்தது என்பது புரியாத புதிராக உள்ளது.


Click it and Unblock the Notifications