கொழும்பு : இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பதவியேற்ற பின்னரும் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பின்னர் அது இன்னும் அதிகரித்தது. சில சமயம் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து வேறு வீரர்களை கூட கேப்டனாக சில தொடர்களில் பயன்படுத்தி பார்த்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.

ஆனாலும், உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடர்களுக்கு ரோஹித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்த தகுதியான நபராக இருக்கிறார். ஆனாலும், ஒன்றிரண்டு தோல்விகளுக்கெல்லாம் தன்னை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நடப்பு ஆசிய கோப்பை தொடரை வென்று காட்ட வேண்டும்.
அத்துடன் ஆசிய கோப்பை வரலாற்றில் தோனி தான் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த சாதனையை எட்டும் வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பே அவர் அந்த சாதனையை சமன் செய்யலாம்.
தோனி 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரோஹித் சர்மா 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த மீதமுள்ள ஒரு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடையவில்லை. அந்தப் போட்டி மழையால் தடைபட்டு, கைவிடப்பட்டது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் இருக்கிறார். அவர் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
வெற்றி சதவீத அடிப்படையில் பார்த்தால் ரோஹித் சர்மா தான் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளார். அந்த அடிப்படையிலேயே அவர் தோனி சாதனையை சமன் செய்தாலே சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்று விடுவார்.
அத்துடன் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 10 வெற்றிகளுடன் தோனி சாதனையையும் முறியடித்து, இந்திய அணிக்கு இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை பெற்றுக் கொடுத்த பெருமையும் அவருக்கு கிடைக்கும். விராட் கோலியின் ஓய்வு காரணமாக, 2018 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா அந்த கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தார்.
தற்போது மீண்டும் 2023இல் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் வென்றாலே அவர் ஆசிய கோப்பையில் தோனியை விட சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுவிடுவார். கோப்பையையும் வென்றால் அவரை உலகக்கோப்பை தொடரில் யாரும் கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு செல்வார் என்பது நிச்சயம்.