ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷன் பேக் அப் வீரராகவே இருப்பார் என்ற நிலை உருவாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் சூழலில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா டிஎல்எஸ் விதிமுறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி எப்படி நட்சத்திர வீரர்கள் இல்லாமல் விளையாடியதோ, அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடியது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாட இரு அணிகளின் முக்கிய வீரர்கள் ராஜ்கோட் பயணித்துள்ளனர். இதனால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் 3வது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதல் இரு போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 3வது ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் யார் களமிறங்குவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரில் இஷான் கிஷன் கடைசி போட்டியில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்கினார்.
கடந்த இரு போட்டிகளில் கூட மிடில் ஆர்டர் வீரராக இஷான் கிஷன் விளையாடினார். ஆனால் தற்போது மிடில் ஆர்டர் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ஃபார்முக்கு வந்திருப்பதால், இஷான் கிஷன் மீண்டும் தொடக்கம் கொடுக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷன் பேக் அப் வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.