இந்திய விளையாட்டு துறைக்கு உதவும் ஜப்பான் பல்கலைக்கழகம்.. இப்படி ஒரு அமைப்பு நம்ம நாட்டில் இல்லையே?
டோக்கியோ: ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்கு பத்து நாட்களுக்கு முன்பாக, இந்திய தடகள குழுவினர் சுகுபா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்குவதற்காக, மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தடகளச் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டோக்கியோவின் புகழ்பெற்ற அகிஹபாரா இரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள சுகுபா பல்கலைக்கழகம், இந்திய விளையாட்டு நிர்வாகத்தின் எதிர்கால மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி வருகிறது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் SAI எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கும், ஜப்பான் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சுகுபா பல்கலைக்கழகத்திற்கும் இடையே விளையாட்டு உறவை வலுப்படுத்த நவம்பர் 2016-இல் முதன்முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் திறன் மேம்பாடு, விளையாட்டு அறிவியல், ஆராய்ச்சி மற்றும் உயர் செயல்திறன் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் ஜூன் 2026-இல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகள், 2030 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் நீண்டகால ஒலிம்பிக் இலக்குகளை நோக்கி இந்தியாவைத் தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்."எதிர்காலத்தைக் கற்பனை செய்யுங்கள்" என்ற தாரக மந்திரத்துடன் இயங்கும் சுகுபா பல்கலைக்கழகம், ஜப்பானின் முன்னணி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
1878-இல் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆசியாவின் முதல் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும் ஜுடோவின் நிறுவனருமான ஜிகோரோ கானோவுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியலுக்கான முதன்மை சர்வதேச மையமாக இது உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் உயர்தர ஐஐடி வளாகங்களை போன்ற சூழலுடன் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில், பெரும் பகுதி விரிவான விளையாட்டு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கை ஓடுதளப் பாதையுடன் கூடிய பல்துறை விளையாட்டு அரங்கம், பேஸ்பால், டென்னிஸ், ஜுடோ, நீச்சல் போன்ற விளையாட்டுகளுக்கான பிரத்யேக வசதிகள், அதிநவீன மருத்துவ மையங்கள் மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குநரும், ரோஹ்தக்கில் உள்ள தேசிய குத்துச்சண்டை சிறப்பு மையத்தின் முன்னாள் தலைவருமான சச்சின் கே., இங்கு விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் ஆய்வுகளில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார். "கல்விசார் சிறப்பும் விளையாட்டுசார் சிறப்பும் ஒன்றுக்கொன்று போட்டியிடாமல், இணையான முறையில் எவ்வாறு ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகின்றன என்பதை சுகுபாவில் நேரடியாகப் பார்க்க முடிகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகுபா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் பேராசிரியர்கள் ஆவர். 12 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீரரும், தனது பெயரில் Asteroid ஒன்றைக் கொண்டவருமான சாவோ கட்டோ இங்கு பேராசிரியராக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்ற சிறப்பு பேராசிரியராக உள்ளார். இவரைத் தவிர 1988 சியோல் ஒலிம்பிக்கில் ஜுடோவில் வெண்கலம் வென்ற காஓரி யமகுச்சி , 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹிரோடகா ஒகாடா போன்ற பல ஒலிம்பிக் வெற்றியாளர்கள் இங்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
"ஒலிம்பிக் வெற்றியாளர்கள் வகுப்பறையில் கற்பிப்பது விளையாட்டுப் கல்விக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை தருகிறது. கல்விசார் அறிவோடு தங்களின் கள அனுபவத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும்போது, உயர் செயல்திறனுக்கு என்ன தேவை என்பதையும், சிறப்பை எவ்வாறு அடைவது என்பதையும் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது" என சச்சின் தெரிவித்துள்ளார்.
சுகுபா பல்கலைக்கழகம் இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஒலிம்பியன்களை உருவாக்கியுள்ளதுடன், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 41 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 135-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மணிப்பூரில் உள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம், பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் போன்றவை முதன்மை கல்வி நிறுவனங்களாக உள்ளன. இருப்பினும், இந்தியாவில் விளையாட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் பாடத்திட்டங்களை மையமாகக் கொண்டவையாகவே உள்ளன. மாறாக, சுகுபாவில் அறிவியல் ஆராய்ச்சியே மேம்பாட்டின் மையப்புள்ளியாக உள்ளது. தற்போது இந்தியாவில் இந்த அணுகுமுறை மாறி வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் 'கேலோ இந்தியா' திட்டத்தின் மூலம் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளர் பணி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வெற்றிகரமான விளையாட்டு அமைப்பை உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியால் மட்டுமே கட்டமைத்துவிட முடியாது. கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக தலைமை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை சுகுபா உணர்த்துகிறது.
ஐச்சி-நாகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய ஜப்பான் 83 தங்கம் உட்பட 269 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. அடுத்து வரவிருக்கும் 2030 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அகமதாபாத் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை, சுகுபா பல்கலைக்கழகத்துடனான கூட்டணியின் மூலம் இந்தியா பெற்ற பாடத்தின் பலனை அளவிட சரியான தருணமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


