லக்னோ: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா புதிய பந்தில் தன்னை விட சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 6 போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அதிரடியாக தொடங்கி இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர்.

அப்போது பும்ரா பந்துவீச்சில் டேவிட் மலான் மற்றும் நட்சத்திர ஜோ ரூட் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரே ஓவரில் பும்ரா ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பிவிட்டார். அதேபோல் கடைசியில் அபாரமான யார்க்கர் மூலமாக மார்க் வுட்டை போல்டாக்கி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
9 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் கேப்டனாக களமிறங்கிய தரமான கம்பேக்கை கொடுத்தார். அதன்பின் ஆசிய கோப்பையைல் ஃபார்மை நிரூபித்த பும்ரா, உலகக்கோப்பைத் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம், அவர் தன்னை விட புதிய பந்தில் சிறந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா தான் டாப் வீரர். பந்தை கட்டுப்படுத்துவது, வேகம், வேரியேஷன் என்று ஒரு முழுமையான பவுலராக பும்ரா இருக்கிறார். அவர் பந்துவீச்சை பார்ப்பதே சுவாரஸ்யமாக உள்ளது. இதுபோன்ற ஒரு பிட்சில் புதிய பந்தில் இப்படி ஸ்விங் செய்வதை பார்க்கவே மிரட்சியாக உள்ளது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பும்ரா அரவுண்ட் தி ஸ்டம்ப் திசையில் இருந்து பந்துவீசும் போது, சரியாக பந்தின் சீம் பகுதி தரையில் பிட்சாகிறது.
அதேபோல் க்ரீஸில் இருந்து கொஞ்சம் விலகி பவுலர்கள் பந்துவீசும் போது, பேட்ஸ்மேன்கள் பந்து இன்ஸ்விங்காகும் என்று நினைப்பார்கள். இதனால் பேட்டை உள்ளே இருந்து வெளியில் கொண்டு வருவார்கள். ஆனால் பும்ரா பந்தை ஸ்விங் செய்து உள்ளே கொண்டு போகாமல் வெளியில் கொண்டு செல்கிறார். அப்போது பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது.
நான் கிரிக்கெட் விளையாடிய போது, பும்ராவை போல் பேட்ஸ்மேன்களுக்கு அவுட் ஸ்விங்கர்களை வீசுவேன். அப்படி வீசும் போது சில நேரங்களில் பந்தை முழுமையாக என்னால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆனால் புதிய பந்தில் பும்ரா என்னை விடவும் சிறப்பாக கட்டுக்கோப்புடன் வீசுகிறார். எனக்கு தெரிந்து பும்ராவின் ஷூக்களை பிடுங்கி வைத்தால் மட்டும் தான் அவரை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.