லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாகவே அமைந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த முடிந்தது. அந்த மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே வீழ்த்தினார்.
மற்ற பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், அவர் அதிக ஓவர்கள் பந்துவீச வேண்டிய கட்டாய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டு இருக்கிறார். இதே போன்ற சூழ்நிலையால்தான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை கைவிட்டுவிட்டதாகவும், பும்ராவுக்கு அதிக சுமை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்தப் போட்டியில் இரண்டாவது நாளில் பும்ரா 13 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அது நோ-பால் ஆக அமைந்தது.
அவருக்கு அடுத்து சிறப்பாக வீசிய பந்துவீச்சாளர் என்றால் அது முகமது சிராஜ் தான். அவர் 14 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார், ஆனால் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. அதேபோல ரவீந்திர ஜடேஜா 9 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இருந்தார். அவரும் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.
இவர்கள் மூவரைத் தாண்டி பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அதிக ரன்களை வாரி இறைத்தனர். பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களில் 56 ரன்களும், தாகூர் 3 ஓவர்களில் 23 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.
இதை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், "இந்தப் போட்டியில் இன்னும் 17 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அது அத்தனையையும் பும்ரா மட்டுமே வீழ்த்த முடியுமா? 20 விக்கெட்டுகள் வீழ்த்தினால் தான் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். எப்படி ஒரு பவுலரே அதை செய்ய முடியும்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 போட்டிகள் இருக்கும் நிலையில், அதில் தன்னால் மூன்று போட்டிகளில் தான் விளையாட முடியும் என பும்ரா ஏற்கனவே கூறியிருக்கிறார். ஏனெனில், அவர் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் 5 போட்டிகளிலும் விளையாடினால் நிச்சயம் அவரது காயம் மேலும் பெரிதாகும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய மூவர் மட்டுமே இனி பந்துவீச வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. மற்ற இருவரும் விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும் ரன்களையும் வாரி வழங்குகிறார்கள். எனவே இந்திய அணி இந்தப் போட்டியில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ராவின் பணிச்சுமையைக் கவனிக்க வேண்டிய அவசியம் முதல் நாள் அவர் பந்துவீசியபோதே ஏற்பட்டுவிட்டது.