மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தான் விக்கெட் வீழ்த்தியதற்குப் பிறகு அதைக் கொண்டாடும்போது 'கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பவில்லை' எனக் கூறியிருக்கிறார். இது மறைமுகமாக விராட் கோலியை சுட்டிக்காட்டுவதாகப் போல இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை கிளம்பி உள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக அதிக வெற்றிகளைப் பெற்றதற்கு விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். அதேபோல, எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் தனது அணியின் பந்துவீச்சாளர் விக்கெட் வீழ்த்தினால், அவர்களை விட அதிக ஆக்ரோஷத்துடன் அதை கொண்டாடுவார் விராட் கோலி.

மறுபுறம், ஜஸ்பிரித் பும்ரா உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், தான் விக்கெட் வீழ்த்தினால் சத்தமிட்டோ, ஆக்ரோஷமாகவோ, மைதானத்தில் ஓடி வந்தோ அந்த விக்கெட்டைக் கொண்டாட மாட்டார். மாறாக, சில முகபாவனைகளை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதையும் தாண்டி பும்ரா மிகச் சிறந்த தருணங்களிலேயே விக்கெட் வீழ்ச்சியைக் கொண்டாடி இருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு பேட்டியின் போது பும்ராவிடம் கேள்வி எழுப்பினார். அதில், "நீங்கள் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறீர்கள். அதன் பின் விக்கெட் வீழ்த்துகிறீர்கள். ஆனால், அதை ஏன் ஆக்ரோஷமாகக் கொண்டாடுவதில்லை?" என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பும்ரா, "நான் வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறேன். ஆக்ரோஷமாகக் கொண்டாடுவதற்காக விளையாடவில்லை. எதிரணி வீரர்களையும் நாம் மதிக்க வேண்டும். அந்தக் கோட்டைத் தாண்டுவதை நான் விரும்பவில்லை. மேலும், கோமாளி போல நடந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை" என்றார்.
பும்ரா சொன்னது அப்படியே விராட் கோலியின் செயல்களுக்கு பொருந்திப் போவதுதான் இங்கே சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில், விராட் கோலி எதிரணி வீரர்களைச் சீண்டும் வகையில் அந்த விக்கெட் வீழ்ச்சியைக் கொண்டாடுவார். சில சமயம் அவரது ஆக்ரோஷம் மற்றும் சத்தம் ஆகியவை சில வெளிநாட்டு பத்திரிகைகளால் 'கோமாளித்தனம்' எனவும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பும்ரா அதே வார்த்தையைப் பயன்படுத்தி தான் கோமாளியாக நடந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறியிருப்பது இங்கே கவனம் பெற்றிருக்கிறது. இதை எடுத்து விராட் கோலி ரசிகர்கள், பும்ரா யாரைச் சொன்னார் என விவாதித்து வருகின்றனர்.