ஒரு கையில் ரஞ்சிக் கோப்பை.. மறுபக்கம் நிச்சயதார்த்தம்.. வாழ்க்கை ஒரு சொர்க்கம்... சொக்கும் ஜெயதேவ்!
மும்பை: செளராஷ்டிரா கிரிக்கெட் அணியின் கேப்டனான ஜெயதேவ் உனத்கட் சூப்பர் ஹேப்பியாக உள்ளார். இருக்காதா பின்னே.. ரஞ்சிக் கோப்பையை முதல் முறையாக வென்றது ஒரு பக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்த நிலையில் மறுபக்கம் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் வாழ்க்கை அருமையாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்களில் ஜெயதேவும் ஒருவர். செளராஷ்டிர அணியை இந்த முறை ரஞ்சிக் கோப்பையை வெல்ல வைத்து அசத்தி விட்டார். இதுதான் செளராஷ்டிர அணிக்கு முதல் ரஞ்சிக் கோப்பையாகும்.
இந்த ரஞ்சித் தொடரில் அதிக விக்கட்களை கைப்பற்றி 21 வருடமாக இருந்து வந்த சாதனையை முறியடித்தும் உள்ளார். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

ஜெயதேவுக்கு நிச்சயமானது திருமணம்
சமீபத்தில்தான் ஜெயதேவுக்கு திருமணம் நிச்சயமானது. இதை தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஜெயதேவ். அவரது வருங்கால மனைவி பெயர் ரின்னி கன்டாரியா. 28 வயதான ஜெயதேவ் புதிய இன்னிங்ஸை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ரின்னி குஜராத் ஹைகோர்ட்டில் வக்கீலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நேரம் நல்லாருக்கு
இதுகுறித்து ஜெயதேவ் கூறுகையில், எனக்கு நேரம் நல்லாருக்கு. பெரும் மகிழ்ச்சியாக உள்ளேன். எல்லாமே எனது வாழ்க்கையில் சரியான நேரத்தில் நடக்கும் என்பதை நம்புபவன் நான். அதன்படியே எல்லாம் கூடி வருகிறது. ரஞ்சிக் கோப்பை, திருமணம்.. வாழ்க்கை சொர்க்கமாக உள்ளது என்றும் தன்னுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

ஒரு வருடமாக தேடி கிடைத்த பெண்
எனக்குப் பொருத்தமான பெண்ணை கடந்த ஒரு வருடமாக தேடி வந்தனர் எனது பெற்றோர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் அனைத்தும் கூடி வந்தது. ரின்னியை மணக்கப் போகிறேன். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும். ரின்னியின் சொந்த ஊரான ஜுனாகத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சின்ன விழாதான். பெரிய அளவில் யாரையும் கூப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வாழ்த்து மழையில் ஜெயதேவ்
சொந்தக்காரர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அவரது மனைவி மட்டும் வந்திருந்தனர். தற்போது ஜெயதேவுக்கு அவரது கிரிக்கெட் நண்பர்கள் மற்றவர்கள் என பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அவரும் புது மாப்பிள்ளை தோரணையுடன் ஹேப்பியாக வலம் வருகிறார்.

வருங்கால மனைவியுடன்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடவுள்ளார் ஜெயதேவ். இந்த சீசன் தள்ளிப் போயுள்ளதால் சற்று ஏமாற்றமடைந்துள்ளார். ஆனால் தொடரின்போது அருமையாக ஆட தயாராகி வருவதாக ஜெயதேவ் ஏற்கனவே கூறியுள்ளார். சமீபத்தில் ஜெயதேவ் போட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதவில், 6 மணி நேரம், 2 வேளை சாப்பாடு, ஒரு மட் கேக் என்று தனது வருங்கால மனைவியுடன் செலவழித்த அற்புதமான தருணத்தை அழகாக விளக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications