இந்திய அணிக்கு புதிய சவால்.. கவுன்டி கிரிக்கெட்டில் ஜோ ரூட் காட்டிய சுழல் வித்தை
ஓல்ட் ட்ராபோர்டு : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வரும் ஜோ ரூட், லேன்காஷயர் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்களை எடுத்தார். இதுவே, ஜோ ரூட்டின் சிறப்பான பந்து வீச்சாகும்.
இன்னும் சில தினங்களில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலானோர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்த “நான்கு நாள் போட்டிகள்” தொடரில் விளையாடி டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடரில், யார்க்ஷயர் அணி, லேன்காஷயர் அணியை எதிர்கொண்டது. முதல் இன்னிங்ஸில் யார்க்ஷயர் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. லேன்காஷயர் அணியின் கிளார்க் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய லேன்காஷயர் அணி, 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்க்ஸில் யார்க்ஷயர் அணி 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேர்ஸ்டோ 82 ரன்களும், ப்ரூக் 55 ரன்களும் எடுத்தனர். 323 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லேன்காஷயர் அணி ஒரு கட்டத்தில் 190-6 என்ற நிலையில் இருந்தது. அடுத்த நான்கு விக்கெட்களையும் 204 ரன்களுக்கு இழந்து, 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
யார்க்ஷயர் அணியில் ஆடிய ஜோ ரூட் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளராவார். முதல் இன்னிங்க்ஸில் பந்து வீசாத நிலையில், அடுத்த இன்னிங்ஸில் 7.4 ஓவர்கள் வீசி, 5 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதில் ஐந்து மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதுவே ஜோ ரூட்டின் சிறப்பான பந்து வீச்சாகும்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த இந்த சாதனையால் இங்கிலாந்து அணி உற்சாகம் அடைந்துள்ளது. இங்கிலாந்தின் சுழல் கூட்டணியாக அதில் ரஷித் மற்றும் மொயீன் அலி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோ ரூட்டின் பகுதி நேர பந்து வீச்சும் தற்போது வலுவான நிலையில் இருப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.
இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் முக்கிய பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் வகையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோ ரூட்டின் சுழலை சந்திக்கவும் இந்திய வீரர்கள், தற்போது தயாராக வேண்டும்.
Story first published: Wednesday, July 25, 2018, 11:54 [IST]
Other articles published on Jul 25, 2018


Click it and Unblock the Notifications