எவ்வளவு அவமானம்.. 2000 ரன்கள் அடிக்கும் வரை டீமில் டம்மி பீஸாக பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவின் கதை
கொழும்பு : ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தார்.
அவர் இன்று 10,000 ரன்களை கடந்தார் என்பதை பலரும் கொண்டாடி வந்தாலும் துவக்கத்தில் அவர் கடந்து வந்த பாதை அத்தனை எளிதல்ல.

இந்திய அணியில் இடம் பெற்று விட்ட பின்னரும் சுமார் ஆறு ஆண்டுகள் அவர் அணியில் இரண்டாம், மூன்றாம் நிலை வீரராகவே இடம் பெற்றார். இன்று அவர் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆனால், அவரின் முதல் 2,000 ரன்கள் எத்தனை போட்டிகளில் வந்தது என்று அறிந்தால் பெரும் வியப்பாகவே இருக்கும்.
2007 ஜூன் 23 அன்று ரோஹித் சர்மா இந்திய அணியில் தன் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார். அயர்லாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த ஆண்டு அவர் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அதில் அவர் எடுத்த ரன்கள் 8 மட்டுமே. 2008ஆம் ஆண்டு தொடர்ந்து அவருக்கு தோனி தலைமையிலான இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் மிடில் ஆர்டரில் தான் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.
ஆனாலும், தோனி அவர் மீது நம்பிக்கை இழக்கவில்லை. 2007 முதல் 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு வரை அவர் இந்திய அணியில் சில இடைவெளிகளோடு ஆடி வந்தாலும் முக்கியமான உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவரது மோசமான ஃபார்மை காரணம் காட்டி அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது. அப்போது மனம் நொந்து போனார்.
ஆனாலும், உள்ளூர் போட்டிகளில் தன் திறனை நிரூபித்து அணியில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறத் துவங்கினார். தன் முதல் 2000 ரன்களை அவர் எட்ட 82 இன்னிங்க்ஸ்களை எடுத்துக் கொண்டார். விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் கூட ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.
அப்போது இந்திய அணியில் விராட் கோலி என்ற சூரன் மிக விரைவாக ரன் குவித்து கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது ரோஹித் சர்மா பத்தோடு பதினொன்றாகவே அணியில் இருந்தார்.
2013ஆம் ஆண்டு இந்திய அணியில் துவக்க வீரராக ரோஹித் சர்மாவை ஆட வைக்க முடிவு செய்யப்பட்டது. அது அவரின் கிரிக்கெட் வாழ்வையே புரட்டிப் போட்டது. அப்போது வீரேந்தர் சேவாக்கிற்கு பதிலாக யாரை துவக்க வீரராக அணியில் ஆட வைக்கலாம் என்ற தேடல் இருந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரஹானே துவக்க வீரராக முதல் மூன்று போட்டிகளில் களமிறங்கினார். அவர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில் நான்காவது போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் போட்டியில் அவர் 93 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். அதன் பின் அவருக்கு அணியில் சில காலம் கழித்து துவக்க வீரராக தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை அடித்து அணியில் தன் இடத்தை உறுதி செய்து கொண்டார்.
முதல் 2,000 ரன்களை சேர்க்க 82 இன்னிங்க்ஸ் எடுத்துக் கொண்ட ரோஹித் சர்மா, அடுத்த 8,000 ரன்களை சேர்க்க வெறும் 159 இன்னிங்க்ஸ்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். சுமார் ஆறு ஆண்டுகள் அணியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என தவிக்கும் வீரராக இருந்த அவர், துவக்க வீரராக மட்டுமின்றி, கேப்டனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை விடவும் ரோஹித் சர்மாவின் 10,000 ரன்கள் பலருக்கு மிகப்பெரும் ஊக்கமாக அமையும் என்றால் அது மிகையில்லை.


Click it and Unblock the Notifications