லக்னோ : ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கிய லக்னோ வீரர் யுத்விர் சிங் அறிமுக போட்டியிலேயே கலக்கினார். ஐபிஎல் தொடர் மூலம் இந்தியா பல வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. இதில் காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.
உம்ரான் மாலிக்கின் வெற்றியை தொடர்ந்து காஷ்மீரில் இது போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்களா என்ற பல ஐபிஎல் அணிகளின் கண்கள் சென்றன. சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுப்பது போல், தற்போது, பல அணிகளும் காஷ்மீரில் முகாம்களை நடத்தி வீரர்களை தேர்வு செய்தனர்.

இதில் தற்போது அனைவரின் கவனத்தையும் லக்னோ வீரர் யுத்விர் சிங் ஈர்த்துள்ளார். யுத்விர் சிங்கிற்கு பிசிசிஐயை நடத்தும் ஐதராபாத் டி20 அணியில் விளையாட தான் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, அவர் தனது சொந்த ஊரான காஷ்மீருக்கே களமிறங்கி விளையாடினார். 4 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
யுத்விரை முதலில் கண்டுபிடித்தது மும்பை அணி தான். 2020 ஆம் ஆண்டு யுத்விர் சிங் நெட் பவுலராக தான் விளையாடினார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு மும்பை அணி 50 லட்சம் கொடுத்து 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் யுத்விர் சிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரவில்லை.

இந்த நிலையில் தற்போது லக்னோ அணி 20 லட்சம் கொடுத்து யுத்விர் சிங்கை தேர்வு செய்து விளையாட வைத்தது. இன்று பஞ்சாப் எதிராக பந்துவீசிய யுத்விர் சிங் தொடர்ந்து 140 கிமீ வேகத்தில் வீசி அசத்தினார். இதில் பிராப்சிம்ரன் சிங் விக்கெட்டை ஸ்டம்புகள் சிதற, யுத்விர் சிங் வீழ்த்தினார். பார்ப்பதற்கு மார்க் வுட் போல் காட்சி அளிக்கும் யுத்விர் சிங் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது.