பும்ரா, ராகுல் டிராவிட்டை அவமானப்படுத்திய மத்திய அரசு.. 2024 ஆண்டில் சாதித்தும் புறக்கணிப்பு
டெல்லி : 2024 ஆம் ஆண்டு விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது இம்முறை எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் வழங்கப்படவில்லை. இதேபோன்று சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருதும் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல உதவியாக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு தரப்படவில்லை.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது இம்முறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பட்டியலில் ஒருவர் கூட கிரிக்கெட் வீரர்கள் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய அணி இம்முறை t20 உலக கோப்பையை வென்றும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக நடப்பாண்டில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள பும்ரா, டி20 உலக கோப்பைத் தொடரில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் பும்ராவுக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு சாதனைகளை செய்திருக்கும் பும்ராவுக்கு இதுவரை அர்ஜுனா விருது கூட வழங்கப்படவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.
இதேபோன்று சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருது ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல டிராவிட் கடுமையாக உழைத்தார். மேலும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி வர டிராவிட்டின் பங்கும் முக்கியமாக இருந்தது. ஆனால் ராகுல் டிராவிட் துரோணாச்சாரியார் விருது வழங்கப்படவில்லை. இதனால் இந்த விருது எப்படி வழங்கப்படுகிறது? பரிந்துரை செய்ய என்ன நடைமுறை? இல்லை விருதுக்கு பரிந்துரை செய்யாமல் பிசிசிஐ தூங்கி விட்டதா என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications