KKR vs LSG: 'டை’யில் முடிந்த போட்டி.. லக்னோ - கொல்கத்தா மோதலில் கடைசி பந்து வரை நீடித்த திரில்லர்!
லக்னோ: ஏகானா மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் 38-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டி 'டை' எனப்படும் சமனில் முடிந்தது. கடைசி பந்து வரை வெற்றி யாருக்கு என்ற கேள்விக்குறி நீடித்த நிலையில், இரு அணிகளுமே சரியாக 155 ரன்கள் எடுத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றனர். அடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் படுமோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

5 விக்கெட் வீழ்த்திய லக்னோ அணியின் மோசின் கான் மற்றும் அதிரடியாக 83 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் ஆகியோரின் போராட்டங்கள் இறுதியில் சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே கடும் சோதனையாக அமைந்தது. லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது வேகத்தில் சிக்கி கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே 10 ரன்களிலும், செய்ஃபெர்ட் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். தொடர்ந்து ரோவ்மன் பாவெல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தத்தளித்தது.
இந்த இக்கட்டான நிலையில் ரிங்கு சிங் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. கேமரூன் கிரீன் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனாலும், ரிங்கு சிங் கடைசி வரை நங்கூரம் இட்டு நின்று ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்த அவர், அணியின் ஸோகரை ஒரு கௌரவமான நிலைக்கு கொண்டு சென்றார். லக்னோ தரப்பில் மோசின் கான் 4 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடி 38 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக ஐடன் மார்க்ரம் 31 ரன்களும், ஆயுஷ் பதோனி 24 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வலு சேர்த்தனர். ஆனால், கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
வைபவ் அரோரா 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க லக்னோ அணி போராடியது. இறுதி கட்டத்தில் முகமது ஷமி ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கையளித்தார். இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது.
அதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கிரம் ரன் ஏதும் எடுக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து ஆடியது. அந்த அணியின் ரிங்கு சிங் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.


Click it and Unblock the Notifications