கே.எல். ராகுல் நீக்கம்.. உள்ளே வந்த ஜார்கண்ட் வீரர் ஷிகர் மோகன்.. இந்தியா ஏ டெஸ்ட் அணியில் மாற்றம்
மும்பை: சீனியர் நட்சத்திர வீரர் கே.எல். ராகுலுக்கு மாற்று வீரராக, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம் இடதுகை தொடக்க பேட்டர் ஷிகர் மோகன் முதல்முறையாக இந்திய ஏ அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணியில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம்பெற்றுள்ளார். இதன் காரணமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2 மற்றும் 3-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ராகுலால் விளையாட முடியாது. எனினும் அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று தொடங்கும் முதல் போட்டியில் மட்டும் ராகுல் களமிறங்குகிறார். அதன் பின்னர் அவர் இந்திய சீனியர் அணியுடன் இணைவார் என்பதால், மீதமுள்ள 2 போட்டிகளில் ஆட ஷிகர் மோகன் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான 21 வயதான ஷிகர் மோகன், இதுவரை 12 முதல்தர போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் ஆடி 1,109 ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளார். சென்னையில் நடந்த துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். தொடர்ந்து இரானி கோப்பையிலும் 60 ரன்கள் எடுத்தார். நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 2 பிரம்மாண்ட சதங்களை விளாசியுள்ளார். கேரளாவிற்கு எதிராக 143 ரன்களும், பிரித்வி ஷா தலைமையிலான மகாராஷ்டிராவுக்கு எதிராக 127 ரன்களும் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்தியா ஏ அணியின் கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில், ரிஷப் பண்ட் காயத்தால் விலகியதால் ஜார்க்கண்டின் மற்றொரு வீரர் குமார் குஷாக்ரா ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராகக் களம் இறங்க தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஷிகர் மோகன் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய ஏ தொடரில் சாய் சுதர்சன் தொடக்க வீரராக ஆடியிருந்தாலும், நடப்பு சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷிகர் மோகனுக்கே வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நியூசிலாந்தில் அவர் சிறப்பாக ஆடினால் இந்திய டெஸ்ட் அணி வாய்ப்பும் கிடைக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications


