WTC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்தியா என்ன செய்யணும்? ஆஸ்திரேலியா தோற்றது சாதகமா?
கேபெர்ஹா: தென்னாப்பிரிக்க அணி 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இதன் காரணமாக, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இது எந்த அளவுக்கு சாதகம் அல்லது பாதகம்? என்பன குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவின் இந்த படுதோல்வி முதலிடத்தில் இருந்த அவர்களின் புள்ளிகளைக் குறைத்துள்ளதே தவிர அந்த அணி முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது. எனவே, இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் மிகக் கடுமையான சவாலாகவே நீடிக்கின்றன.
புள்ளிப்பட்டியலில் 12 போட்டிகளில் 3 தோல்விகளுடன் 75.00 சதவீத புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வரும் நியூசிலாந்து அணி 72.22 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 66.67 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன. சொந்த மண்ணில் 4 போட்டிகளில் விளையாட உள்ள வங்கதேசம் 4-வது இடத்தில் நீடிக்க, இந்திய அணியோ 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. நியூசிலாந்தில் 2 போட்டிகளும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற 60 சதவீத புள்ளிகளைத் தொட வேண்டும். அதற்கு இந்த 7 போட்டிகளில் இருந்து குறைந்தபட்சம் 62 புள்ளிகளை வென்றாக வேண்டும். அதாவது, இனிவரும் 7 ஆட்டங்களில் 2 போட்டிகளுக்கு மேல் இந்தியா எக்காரணம் கொண்டும் தோற்கக் கூடாது.
60 சதவீதத்தை எட்டினாலும் இறுதிப் போட்டி வாய்ப்பு உறுதி என கூறி விட முடியாது. இந்திய அணிக்கு முன் உள்ள நான்கு அணிகளின் வெற்றி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? இல்லையா? என கூற முடியும். உதாரணத்திற்கு, கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா 69.44 சதவீதமும், ஆஸ்திரேலியா 67.54 சதவீதமும் பெற்றிருந்தன. இதனால் 60 சதவீதம் கூட போதாது என்ற நிலையே உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்தியா தன் பங்குக்கு வெல்வதோடு, முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்தடுத்து சறுக்க வேண்டும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு இது மிகக் கடுமையான சவாலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications


