சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான தொடக்கத்தை பெற்றிருக்கிறது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை இந்திய அணி துரத்திய போது, ரோகித் சர்மா ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் இந்திய அணி இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் கடைசி வரை 97 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

பொதுவாக அனைத்து வீரர்களுமே சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தால் துள்ளி குதிப்பார்கள். ஆனால் கே எல் ராகுல் வழக்கத்துக்கு மாறாக சிக்ஸர் அடித்து விட்டு அச்சச்சோ என கீழே உட்கார்ந்து விட்டார். இதை பார்த்ததும் அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எழுந்து நின்று பேட்டை தூக்கி தன்னுடைய வெற்றியை கொண்டாடினார்.
இதுகுறித்து கே.எல் ராகுலிடம், அணியை வெற்றி பெற வைத்து விட்டு ஏன் சோகமாக அமர்ந்து விட்டீர்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப் கேட்டார். இதற்கு பதில் அளித்த கே எல் ராகுல், வெற்றிக்கு ஐந்து ரன்கள் இருந்தது. நான் 91 ரன்கள் எடுத்திருந்தேன். உலகக்கோப்பை தொடரில் இதுவரை நான் சதம் அடித்தது கிடையாது.

இதனால் முதலில் ஒரு பவுண்டரி அடித்து விட்டு வெற்றிக்கு ஒரு ரன்கள் இருக்கும்போது சிக்ஸர் அடிக்கலாம் என நினைத்தேன். நான் கடைசியாக அடித்த ஷாட்டும் பௌண்டரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அடித்தேன். ஆனால் நான் அடித்த பந்து சிக்ஸருக்கு சென்றது.இதனால் என்னுடைய சதம் அடிக்கும் வாய்ப்பு கைநழுவியது.இதன் வெளிப்பாடாக தான் நான் அப்படி அமர்ந்தேன். பரவாயில்லை இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம். எனக்கு இன்னொரு முறை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறேன் என்று ராகுல் கூறினார்.