கிறிஸ் கெயில், டிவில்லியர்சை பின்னுக்கு தள்ளிய கேஎல் ராகுல்.. ஐபிஎல் வரலாற்றில் மகத்தான சாதனை
லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளார். லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய ஆட்டத்தில் ஷாம்கரன் பஞ்சாப் அணியின் கேப்டனாக களம் இறங்கினார். இதிக் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கயல் மேயர்ஸ் 29 ரன்களிலும், தீபக் ஹூடா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் எப்போதும் போல் பொறுமையுடன் விளையாடிய கே எல் ராகுல் 40 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் அதிவேகமாக 4000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கே எல் ராகுல் பெற்றார்.

இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 112 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் கே எல் ராகுல் 105 இன்னிங்ஸில் எல்லாம் இந்த இலக்கை கடந்து இருக்கிறார். கெயில் 112 இன்னிங்ஸிலும், டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸிலும் விராட் கோலி 128 இன்னிங்சிலும், ஏபி டிவில்லியர்ஸ் 131 இன்னிங்ஸிலும் நான்காயிரம் ரன்களை கடந்திருந்தார்கள்.தற்போது இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி கே எல் ராகுல் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இதேபோன்று கேப்டனாக அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை கே எல் ராகுல் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். இந்த பட்டியலில் 46 இன்னிங்ஸில் டேவிட் வார்னரும், 47 இன்னிங்ஸில் கே எல் ராகுலும், 59 இன்னிங்சில் விராட் கோலியும் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்கள்.

எனினும் கேஎல் ராகுல் தன்னுடைய ஸ்ட்ரைக் ரெட்டில் மிகவும் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கே எல் ராகுல் தன்னுடைய ஸ்ட்ரைக் ரெட்டை அதிகரிக்காத வரையில் இது போன்ற சாதனைகள் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக எடுப்படாது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications