"வேகமும் இல்லை, உயிரும் இல்லை".. கம்பேக் கொடுத்த புவனேஷ்வர் குமாரை விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்
சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். புவனேஷ்வர் குமாரின் பந்துகளில் வேகம் மற்றும் வீரியம் சுத்தமாக இல்லை என்று அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் காட்டிய அபார ஆட்டத்தின் மூலம், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார். கடந்த 2022-க்குப் பிறகு முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆடிய அவருக்கு எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் ஆடிய அவர் 72 பந்துகளை வீசி, அதில் 139 ரன்களை வாரி வழங்கி வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு கணக்கு முதல் போட்டியில் விக்கெட் இன்றி 49 ரன்கள், 2-வது போட்டியில் 50 ரன்களுக்கு 1 விக்கெட், 3-வது போட்டியில் 40 ரன்கள் எனப் படுமோசமாக உள்ளது.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "புவனேஷ்வர் குமாருக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை. அவரது பந்துவீச்சில் வேகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பந்தில் எந்த ஒரு உயிரோட்டமும் இல்லை. பேட்டர்களை அச்சுறுத்தாமல் மிக மெதுவாக ஒரு பூ மாதிரி பந்து செல்கிறது. ஐபிஎல் தொடரில் அவர் அனல் பறக்கும் வேகத்துடனும் கூர்மையுடனும் பந்துவீசினார். இங்கு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை" என ஆதங்கப்பட்டார்.
இதில் ஒரே ஆறுதலாக வெலிங்டனில் நடந்த 3-வது போட்டியின் கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர்களை வீசி புவனேஷ்வர் பழைய ஃபார்முக்கு திரும்பும் அறிகுறிகளைக் காட்டினார். நியூசிலாந்து டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள அவர் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. ஒருவேளை இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் அவர் சரியாக பந்துவீசவில்லை என்றால் இத்துடன் அவரது இந்திய அணி வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications

