“உங்க நல்லதுக்கு தான் தமிழில் பேசல”.. ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் செயல்பாடு.. வச்சு செய்த ஸ்ரீகாந்த்!
சென்னை: பார்டர் கவாஸ்கர் கோப்பையில் தொடர்ச்சியாக தோற்றுவரும் ஆஸ்திரேலிய அணியை இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனக்கே உரிய பாணியில் மோசமாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி கண்டது.
கடந்த 3 பார்டர் கவாஸ்கர் கோப்பையிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே பெற்றுள்ள சூழலில் இந்த முறையும் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்த 2 டெஸ்ட்களிலாவது வெல்ல வேண்டும் என முணைப்பு காட்டி வருகிறது.

அடுத்த 2 டெஸ்ட்
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்தூர் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2013ம் ஆண்டுக்கு பின்னர் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உள்ள இந்திய அணி இந்த முறை ஒயிட் வாஷ் செய்து ஆஸ்திரேலியாவை வழியனுப்பி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீக்காவின் விமர்சனம்
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை விமர்சித்து தள்ளியுள்ளார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அதில், ஆஸ்திரேலிய அணியின் மேனஜருக்கு இந்த தகவலை கூறிக்கொள்கிறேன். ஏதாவது பன்னுங்க பாஸ். இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நான் உங்களின் நன்மைக்காக தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இல்லையெனில் மோசமாக இருக்கும்.

பொட்டலம் கட்டிடுவோம்
ஆஸ்திரேலிய வீரர்களே ஏதாவது செய்து போராடுங்கள். இல்லையெனில் உங்களை 'பொட்டலம்' கட்டிவிடுவார்கள். ஏற்கனவே 2 போட்டிகளில் பொட்டலம் கட்டிவிட்டனர். முழுவதுமாக ஆகிவிடாதீர்கள் என விமர்சித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்களும், ஏதாவது சுவாரஸ்யமாக செய்யுங்கள் எனக்கேட்டு வருகின்றனர்.

பெரும் பின்னடைவு
3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கலவையான அணியுடன் களமிறங்குகிறது. டேவிட் வார்னர், கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தாய் நாட்டிற்கு திரும்பிவிட்டனர். அவர்கள் இனி வரும் டெஸ்ட்களில் விளையாட மாட்டார்கள் எனத்தெரிகிறது. மற்றொரு புறம் கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications