ஆட்டநாயகன் விருதா ? அடுத்த மேட்ச் வெளியே தான்.. குல்தீப் யாதவ் சொன்ன பதில் என்ன தெரியமா?
கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளராக விளங்க கூடியவர் குல்தீப் யாதவ். குறிப்பாக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார்.
எனினும் அவரை இந்திய அணி தொடர்ந்து ஆதரவு கொடுக்காமல் வருகிறது. இதன் காரணமாக குல்தீப் யாதவ் தொடர்ந்து விளையாட முடியாத படி தவித்து வருகிறார்.
குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இதற்காக அவர் ஆட்ட நாயகன் விருதை வாங்கினார்.

கிண்டல்
ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியிலே குல்தீப் யாதவை இந்திய அணி அதிரடியாக நீக்கியது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியில் குல்தீப் யாதவை ரோகித் சர்மா அணியில் சேர்க்க மாட்டார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

மகிழ்ச்சி
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய குல்தீப் யாதவ், என்னுடைய செயல்பாடு குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை என்னுடைய திறமையை பயன்படுத்தி என்னால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அதற்கு ஏற்றார் போல் விளையாடுகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் மிகவும் கவனத்துடன் செயல்படுகிறேன். வாய்ப்பு இல்லாத போது நீங்கள் கொஞ்சம் நிம்மதியாக வெளியே அமர்ந்து இருக்கலாம்.

வாய்ப்பு
என்னுடைய பந்துவீச்சை நான் என்ஜாய் செய்கிறேன். அணியில் இடம் கிடைக்காதது குறித்து நான் யோசிப்பதே கிடையாது. ஏனென்றால் அணியின் காம்பினேஷன் தான் மிகவும் முக்கியம். என்னுடைய கவனம் எல்லாம் எனக்கு வரும் வாய்ப்பை எப்படி நான் சரியாக பயன்படுத்திக் கொள்வது என்பதுதான். பந்துவீச்சில் புது புது யுத்தியை நாம் உருவாக்க வேண்டும். ஒரே மாதிரி நாம் பந்து வீசினால் அது எடுபடாது.
என்னுடைய பேட்டிங்கிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

சாஹல் உதவினார்
எனக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத போது பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஒரு ஆண்டாக என்னுடைய உடல் தகுதியை நான் தீவிரமாக மேம்படுத்தி இருக்கிறேன். இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சியாளர்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.உடலை பத்திரமாக பார்த்துக் கொள்வதன் மூலம் சிறப்பாக ஆடுகளத்தில் செயல்பட முடிகிறது. இதேபோன்று சாகலும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். முதல் ஆட்டத்தில் அவர் விளையாடியதன் மூலம் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள். அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று எனக்கு அவர் அறிவுரை வழங்கினார்.


Click it and Unblock the Notifications