வீரர்களை திரும்ப அழைக்கும் இலங்கை முடிவு முறையர்றது! - பிசிசிஐ
டெல்லி: இப்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெறும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு முறையற்றது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்தது.
உறுதி அளித்தபடி இலங்கை அணி வீரர்கள் மே 21 வரை இங்கு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்களும் அந்த எண்ணத்தில்தான் உள்ளனர்.
ஆனால் இப்போது அவர்கள் முன்னதாகவே போகவேண்டும் என விரும்புவது முறையற்றது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ தலைவர் தொடர்புகொண்டு வருகிறார். இரண்டு வாரியங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மே 10-ம் தேதி தொடங்குவதால் அதற்கு தயாராவதற்காக மே 5-ம் தேதிக்குள் இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப உத்தரவிட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது.
எனினும் மே 15-ம் தேதி வரை அவர்களை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை இலங்கை அரசும், கிரிக்கெட் வாரியமும் ஏற்கவில்லை. இதனால் பிரச்னை பெரிதாகி உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் கிளம்பிவிட்டால், அவர்களுக்கு தரவேண்டிய ஐபிஎல் மேட்ச் கட்டணம் முழுமையாகத் தராமல் நிறுத்தி வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications