”என் மகனை இன்னும் பார்க்கல” ஆட்டநாயகன் விருதை மகனுக்கு அர்ப்பணித்த தமிழக வீரர்.. உருகும் ரசிகர்கள்!
பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கொல்கத்தா அணி வருண் சக்கரவர்த்தி, விருதினை அண்மையில் பிறந்த தனது மகனுக்கும், மனைவிக்கும் அர்ப்பணிப்பதாக கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிபெற்றதற்கு, அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக சுயஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்டநாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி பேசுகையில், கடந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தேன். ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி இருக்கிறேன். வாழ்க்கையும் அப்படிதான். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் விதவிதமான பந்துகளை வீசுவதை விடவும், துல்லியமாக வீச வேண்டும் என்று பயிற்சி செய்து வருகிறேன். எனது பந்துவீச்சில் அதிக வேரியேஷன்களை சேர்க்க விரும்பவில்லை. அதற்காகதான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன்.
இதற்காக கொல்கத்தா அணியின் பிரதீபன் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இருவரும் எனது பயிற்சிக்காக அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். அதேபோல் ஆட்டத்தின் முக்கியமான ஓவர்களை வீச அழைக்கப்படுவதால் மகிழ்ச்சியடைகிறேன். அந்த சவால் எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போது நிதிஷ் ராணா என்னிடம் பந்தை கொடுக்கிறேன். அது அதிகமாக பிடித்திருக்கிறது.
அதேபோல் எனது ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கு எனது மனைவிக்கும், புதிதாக பிறந்த என் மகனுக்கும் பங்கு உண்டு. அதனால் இந்த ஆட்டநாயகன் விருதினை என் மகனுக்கும், என் மனைவிக்கும் அர்ப்பணிக்கிறேன். புதிதாக பிறந்த என் மகனை இன்னும் பார்க்கவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின்னர் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியின் பேச்சு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications