கொல்கத்தா: கால்பந்து உலகின் முடிசூடா மன்னன், அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று (சனிக்கிழமை) கொல்கத்தாவில் தரையிறங்கினார். 'GOAT India Tour 2025 (கோட் இந்தியா டூர்)' பயணத்திற்காக அவர் வந்திறங்கிய போது, கொல்கத்தா விமான நிலையமே ரசிகர்கள் கூட்டத்தால் அதிர்ந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மியாமியில் இருந்து துபாய் வழியாகப் பயணம் செய்து, இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார் மெஸ்ஸி. விடியற்காலை நேரம் என்று கூடப் பாராமல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மெஸ்ஸியின் விமானம் தரையிறங்கிய செய்தி பரவியதும், விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் "மெஸ்ஸி.. மெஸ்ஸி.." என்று விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டனர். அர்ஜென்டினா கொடிகளை அசைத்தும், மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்தும் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்திருந்தனர். பேரிகார்டுகளின் மீது ஏறி நின்று தங்களது தலைவனை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ரசிகர்கள் ஏங்கினர்.
கடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார். இதுகுறித்து டூர் அமைப்பாளர் சதத்ரு தத்தா கூறுகையில், "14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய கால்பந்துக்கும் உலக அரங்கிற்கும் உள்ள தொடர்பு மீண்டும் வளர்கிறது," என்றார்.
ரசிகர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் 4 மணி நேரம் கூடக் காத்திருப்போம். இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அவர் ஒரு மந்திரவாதி, அவர்தான் தலைசிறந்த வீரர்," என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.
கொல்கத்தாவில் மெஸ்ஸி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் -
காலை 9.30 - 10.30: குறிப்பிட்ட விருந்தினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் பிரத்யேகச் சந்திப்பு.
சிலை திறப்பு: தனக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலையை மெஸ்ஸி காணொளி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.
நட்பு ரீதியான போட்டி: மாலையில் யுவபாரதி கிரிராங்கன் மைதானத்தில் (சால்ட் லேக் ஸ்டேடியம்) நடைபெறும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி பங்கேற்கிறார்.
ரசிகர்களுடன் கலந்துரையாடல்: மைதானத்திலேயே ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.4,500 முதல் தொடங்கியது. விலை அதிகமாக இருந்தாலும், மெஸ்ஸியைப் பார்க்கும் ஆர்வத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த 3 நாள் பயணத்தில் கொல்கத்தாவைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கும் மெஸ்ஸி செல்லவுள்ளார். இந்தியாவில் கால்பந்து ஜூரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.