கேப் டவுன் : 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உலக முழுவதும் பிறந்திருக்கிறது. இதில் ஒவ்வொருவரும் தாங்கள் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் முதல் விஷயத்தை யார் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வமும் இருக்கும்.
அந்த வகையில் கிரிக்கெட்டிலும் புத்தாண்டில் முதல் சதத்தை யார் அடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் யார் என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.

2010 ஆம் ஆண்டு புத்தாண்டில் முதல் சதம் அடித்தவர் நமது தல தோனி. 2011 ஆம் ஆண்டு புத்தாண்டில் சச்சின் டெண்டுல்கர் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக புத்தாண்டில் விராட் கோலி சதம் அடித்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். 2012 ,13, 14 என மூன்று ஆண்டுகளுமே கோலிதான் இந்தியாவுக்காக புத்தாண்டில் முதல் சதம் அடித்தார்.
2015 ஆம் ஆண்டு கேஎல் ராகுலும், 2016 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவும் இந்தியாவுக்காக புத்தாண்டில் முதல் சதத்தை அடித்தார்கள். 2017 மற்றும் 18 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக மீண்டும் கோலி புத்தாண்டில் முதல் சதத்தை அடித்தார். 2019 ஆம் ஆண்டு புஜாராவும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் ரோகித் சர்மா இந்தியாவுக்காக முதல் சதத்தையும் அடித்தனர். இதனை அடுத்து 2022 ஆம் ஆண்டு ரிஷப் பந்த் இந்தியாவுக்காக முதல் சதத்தை அடித்தார்.
2023 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக முதல் சதத்தை அடித்திருந்தார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதல் சதத்தை யார் அடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூ இயர் டெஸ்ட் வரும் மூன்றாம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்டில் யார் சதம் அடிக்கிறார்களோ அவர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.