டாக்கா: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணி பங்கேற்குமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஐசிசி விதித்த கெடு இன்றுடன் (ஜனவரி 21) முடிவடையும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளது. இந்நிலையில், வங்கதேச அணியின் டி20 கேப்டன் லிட்டன் தாஸ் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் உலகக்கோப்பைக்குச் செல்கிறோமா என்பதே தங்களுக்குத் தெரியாது என்றும், இது குறித்துப் பேசுவது தனக்குப் பாதுகாப்பானது அல்ல என்றும் லிட்டன் தாஸ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரீமியர் லீக் (BPL) தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நிருபர் ஒருவர் உலகக்கோப்பை விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்ப முயன்றார். அவரைப் பாதியிலேயே தடுத்த லிட்டன் தாஸ், "இதற்குப் பதில் சொல்வது எனக்குப் பாதுகாப்பானது அல்ல" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பிடிவாதம் குறித்துக் கேட்டபோது, "நாங்கள் உலகக்கோப்பைக்குச் செல்கிறோம் என்பது உங்களுக்கே உறுதியாகத் தெரியுமா?" என்று லிட்டன் தாஸ் திருப்பிக் கேட்டார்.
மேலும் பேசிய அவர், "உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. நாம் ஒரே நிலையில்தான் இருக்கிறோம். உலகக்கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் நாங்கள் அங்கே செல்வோமா என்பதே இன்னும் முடிவாகவில்லை. பொதுவாக உலகக்கோப்பைக்கு முன் எந்த நாட்டில் விளையாடுகிறோம், நம் எதிரணி யார் என்பது வீரர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இம்முறை எந்த வீரருக்கும் எந்தத் தகவலும் தெரியாது. என்னைப் போலவே ஒட்டுமொத்த வங்கதேசமும் குழப்பத்தில்தான் உள்ளது" என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இந்தியா செல்ல மறுக்கும் வங்கதேச வாரியத்தின் முடிவு குறித்து வீரர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, லிட்டன் தாஸ் "இல்லை" என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார். வாரியம் தன்னிடம் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்தச் சிக்கலுக்கு அஸ்திவாரம் போட்டது ஐபிஎல் ஏலம் தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் எடுக்கப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மானை, பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுப்பு தெரிவித்து வருகிறது. தங்களது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி ஏற்கனவே நிராகரித்துவிட்டது.
இன்றுடன் ஐசிசியின் கெடு முடிவடைவதால், வங்கதேச அணி உலகக்கோப்பையில் பங்கேற்குமா அல்லது வெளியேற்றப்பட்டு அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து வருமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.