
ஏமாற்றிய உத்தப்பா
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியில், ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் ரன்கள் அடிக்க ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக, ராஜஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய ருதுராஜ், இப்போட்டியில் பந்துகளை க்ளீயர் பண்ண ரொம்பவே சிரமப்பட்டார். 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், அர்ஷ்தீப் சிங் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது ஷாட்டில் அத்தனை விரக்தி இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மொயீன் அலி, 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், அதே அர்ஷ்தீப் ஓவரில் கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா வெறும் 2 ரன்களில் ஜோர்டன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய ராயுடுவும் 4 ரன்களில் அவுட்டானார்.

135 ரன்கள் இலக்கு
இதையடுத்து களமிறங்கிய தோனி வழக்கத்துக்கு மாறாக, தொடக்கத்திலேயே 2 பவுண்டரிகள் அடித்து, ஒரு பாஸிட்டிவான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ஆனால், மீண்டும் ஏமாற்றம் அளிக்கும் வகையில், ரவி பிஷ்னாய் ஓவரில் 12 ரன்களில் போல்டாகி வெளியேறினார். ஒருபக்கம், தனி ஆளாக நின்று போராடிக் கொண்டிருந்த டு பிளசிஸ், அரைசதம் அடித்து, 19வது ஓவரில் தான் முதல் சிக்ஸரை அடித்தார். இந்த போட்டியில் சென்னை அடித்த முதல் சிக்ஸ் இதுதான். 19 ஓவரில் சென்னை ஐந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்து பவுண்டரி, இரண்டாவது பந்து சிக்ஸ் அடித்த டு பிளசிஸ், 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு சென்னை அணியால் பெரிதாக என்ன அடித்துவிட முடியும்? முடிவில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

ஸ்டிரைக் ரேட் 233.33
இதன் பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் லோகேஷ் ராகுல் சிறப்பு மந்திரம் போட்டு வந்திருப்பார் போல. 42 பந்துகளில் 98 ரன்களில் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 233.33. அதாவது, 135 ரன்கள் டார்கெட்டில் அவர் அடித்தது மட்டும் 98 ரன்கள். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிகபட்ச ஸ்கோர் 13 ரன்கள் தான். பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் அந்த 12 புள்ளிகளுடன் -0.001 ரன் ரேட் பெற்றுள்ளது.

ஒற்றிக் கொள்ளும் ரகம்
முதலில் பஞ்சாபை கட்டுப்படுத்த முனைப்புடன் இருந்த தோனி, பிறகு லோகேஷ் ராகுல் பறக்க விட்ட சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார். ராகுலின் 98 ரன்களில் 7 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். ஒவ்வொரு சிக்ஸரும் ஒவ்வொரு ரகம். கண்களில் ஒற்றிக் கொள்ளும் ரகம். ராகுல் ஒவ்வொரு சிக்ஸரையும் விளாசும் போதும், தோனியிடம் இருந்து கோபமோ, விரக்தியோ காண முடியவில்லை. மாறாக, சிக்ஸர் லேண்ட் ஆகும் வரை பார்த்து, அடுத்த பந்துக்கு தயாராகிவிடுவார். அதனால் தான், அவர் தோல்வியையும் மறந்து ராகுலின் சிக்ஸர்களை ரசித்துள்ளார் என்று கூறுகிறேன்.


Click it and Unblock the Notifications