சென்னை: சென்னை அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சிஎஸ்கேவுக்கு ஆதரவு வழங்கியதற்காக விமர்சித்த ரசிகர்களுக்கு, அவர் ட்விட்டரில் கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று தொடங்கியுள்ளது. சென்னையில் தொடங்கியுள்ள குவாலிஃபயர் முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியை காண சென்னை அணிக்காக ஆடிய முன்னாள் வீரர்களும் குவிந்தனர். ராபின் உத்தப்பா, முரளி விஜய், ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் குடும்பத்துடன் ஆட்டத்தை பார்த்தனர்.
அதேபோல் ராபின் உத்தப்பா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து தனது ஆதரவை சிஎஸ்கே அணிக்கு வழங்கினார். வெறும் 2 சீசன்கள் மட்டுமே ஆடிய ராபின் உத்தப்பா சென்னை அணிக்காக தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது சில எதிரணி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் ராபின் உத்தப்பா ஐபிஎல் தொடரில் மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக அதிக ஆண்டுகள் ஆடி இருக்கிறார். நீண்ட காலமாக ஆடிய அணிகளுக்கு வழங்காத ஆதரவை, வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆடிய சென்னை அணிக்கு உத்தப்பா வழங்குவது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராபின் உத்தப்பா ஒரேயொரு வரியில், "விஸ்வாசமும் மரியாதையும் பரஸ்பரமாக கொடுத்து பெறுவது நண்பா" என்று பதில் அளித்துள்ளார். ராபின் உத்தப்பாவின் இந்த பதில், சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேகேஆர் அணி ரசிகர்கள் உத்தப்பாவை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் ராபின் உத்தப்பா தனது ட்விட்டர் பக்கத்தில்,இந்த வெறுப்பை கண்டு எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அனைவருக்கும் அமைதியும், அன்பும் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஆதரவு தெரிவித்துள்ளார்.