முடிவுக்கு வந்த 10 மாத ஓய்வு.. களம் திரும்பிய இளம் வீரர் மோசின் கான்.. சிஎஸ்கே-வுக்கு புதிய சிக்கல்!
லக்னோ: நீண்ட மாதங்களுக்கு பின் லக்னோ அணியின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான் களமிறக்கப்பட்டுள்ளார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பங்கேற்கவில்லை. இதனால் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை க்ருனால் பாண்டியா ஏற்றுள்ளார். இதனிடையே மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி சார்பாக ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு, ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் ஆடிய பின் காயமடைந்த தீபக் சஹர், முழுமையாக குணமடைந்து களமிறங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லக்னோ அணி சார்பாக மிகப்பெரிய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் அசத்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மோசின் கான் மீண்டும் லக்னோ அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடிய மோசின் கான் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று பலரும் பாராட்டினர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக காயமடைந்த மோசின் கான் 10 மாதங்களாக ஓய்வில் இருந்தார். கிட்டத்தட்ட கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் காயமடைந்த அவர், எந்தவித உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் ஐபிஎல் தொடரிலாவது களமிறங்குவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திடீரென சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மோசின் கான் களமிறக்கப்பட்டுள்ளார்.
மோசின் கான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கொரோனா வைரஸ் பரவலின் போது முகமது ஷமியுடன் ஒன்றாக இணைந்து பயிற்சி செய்து வந்தவர். இந்திய அணியின் முகமது ஷமியின் அபாரமான வழிகாட்டுதலால், கடந்த சீசனில் அசாத்தியமாக பந்துவீசி அசத்தினார். தற்போது நீண்ட நாள் ஓய்வுக்கு பின் மோசின் கான் களத்திற்கு திரும்பியுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications