ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிக்கு இடையிலான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் மோதியதால் இந்த ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மெயர்ஸ் ஆகியோர் , டிரெண்ட் பவுல்ட் பந்துவீச்சில் கடுமையாக தடுமாறினர். பவர்பிளே முடிவில் லக்னோ அணி 37 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்கள் ராகுல் 32 பந்தில் 39 ரன்களும், மெயர்ஸ் 42 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பதோனி 1 ரன்னிலும், பிறந்தநாள் கொண்டாடும் தீபக் சாஹர் 2 ரன்கள், ஸ்டோனிஸ் 21 ரன்கள், நிக்கோலஸ் பூரான் 29 ரன்களும் எடுக்க லக்னா ணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் தமிழக வீரர் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 23 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர், விக்கெட்டை கொடுக்காமல் பொறுமையாக விளையாடினர். ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இதே போன்று பட்லர் 41 பந்துகளில் 40 ரன்கள் தான் சேர்த்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரன் ஹேட்மயர் 5 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் படிக்கல் 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்கள் சேர்த்தார்.

கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரியான் பராக் ஒரு சிக்சர் அடித்து 10 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில ரியான் பராக் பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அந்த ஓவரில் 3 மற்றும் 4வது பந்தில் விக்கெட் வீழ்த்த, ராஜஸ்தான் அணி தோல்வி உறுதியாகி விட்டது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.