பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி இன்று களமிறங்கவுள்ளது. சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆர்சிபி வீரர்களும், பிறந்த மண்ணில் மாஸ் காட்டுவதற்கு கே.எல்.ராகுலும் தீவிரமாக இருப்பார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி மோதுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெங்களூரு மைதானத்தில் விராட் கோலி vs குட்டி கோலி ஆட்டம் நடக்கவுள்ளது. கே.எல்.ராகுல் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் என்பதோடு, ஆர்சிபி அணிக்காகவும் விளையாடியுள்ளதால், ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் மும்பை அணியை வெளுத்து வாங்கியது. ஆனால் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மொத்த பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்தும் ஆட்டம் கண்டது. இருப்பினும் விராட் கோலி, டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், பிரேஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். சின்னசாமி மைதானத்திலும் சிராஜ், ஹர்சல் படேல், கரண் சர்மா, டேவிட் வில்லி ஆகியோர் சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.
ஆர்சிபி அணியின் ஒரே கவலை டெத் ஓவர் மட்டும்தான். கடந்த இரு போட்டிகளில் கடைசி 8 ஓவர்களில் மட்டும் ஆர்சிபி அணி 117 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் முதல் 16 ஓவர்களில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பேரின் உழைப்பும் வீணாகும் சூழல் உள்ளது. இதனை மாற்றிக் கொள்ளாவிட்டால் பேட்டிங் பாரடைஸான பெங்களூரு மைதானத்திலேயே ஆர்சிபி அணி தோல்வியடையும் சூழல் வரும். அதேபோல் தினேஷ் கார்த்திக் ஃபார்ம் குறித்தும் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

லக்னோ அணியை பொறுத்தவரை வலிமை குறைந்த டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. சென்னை அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் மட்டுமே நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஆகியோர் ரன்கள் சேர்க்கவில்லை என்றால், அந்நிய மண்ணில் லக்னோ அணி தோல்வியை தொடர வேண்டிய சூழல் உருவாகும்.
சின்னசாமி மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, 6 பந்துகளையும் கூக்ளியாக வீசும் ரவி பிஷ்னாய் மற்றும் அமித் மிஸ்ரா இருப்பதால் ஆர்சிபி அணிக்கு சவால் இருக்கும். அதேபோல் ஆவேஷ் கான் மற்றும் மார்க் வுட் இருவரும் மைதானத்திற்கு தகுந்தாற்போல் பந்துவீசவில்லை என்றால், நிச்சயம் ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வரும். கடந்த போட்டியில் இருவரும் ஆடவில்லை என்பதால், இன்றைய போட்டியில் இருவரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.