
காட்டுத்தீ பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் காட்டுத்தீ பரவியது. அதில் சுமார் 100 கோடி விலங்கினங்கள் பலி ஆகி பெரும் அதிர்ச்சி அளித்தது. அதில் பல நூறு குடும்பங்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். ஆஸ்திரேலியாவின் பெரும் துயரமான சம்பவமாக அது அமைந்தது.

நிவாரண போட்டி
அந்த பாதிப்பிற்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியை பல்வேறு அமைப்புகளும் அளித்தன. இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இணைந்து நிவாரண கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்தது.

இரு அணிகள்
ரிக்கி பாண்டிங் தலைமையில் ஒரு அணியும், கில்கிறிஸ்ட் தலைமையில் மற்றொரு அணியும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும், பிரையன் லாரா, வாசிம் அக்ரம் மற்றும் யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

பயிற்சியாளர் சச்சின்
இதில் ரிக்கி பாண்டிங் கேட்டுக் கொண்டதால் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் லெவன் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், சச்சின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் உடை மாற்றும் அறையில் தனக்கு பிடித்த இடத்தை குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

அந்த புகைப்படம்
யுவராஜ் சிங் அந்த புகைப்படத்தை எடுத்து இருந்தார். அதில் சச்சின் சிட்னி மைதானத்தில் தன் பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்து இருந்தார். தான் பயன்படுத்தும் இடத்தை குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவிற்கு கீழே தான் பாடலாசிரியர் விவேக் தன் ஏக்கத்தை கொட்டி இருக்கிறார்.
பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக் 2015ஆம் ஆண்டு எனக்குள் ஒருவன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து 36 வயதினிலே, இறுதி சுற்று, கபாலி, ரெமோ, மெர்சல், சர்க்கார், பிகில் பேட்ட உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி பெயர் பெற்றவர்.
பேட்டை கையில் எடுங்கள்
அவர், "தலைவா உன்னை இங்கே பார்க்க விரும்பவில்லை. தலைவனை அவரது கோட்டையில் சந்திக்க விரும்புகிறேன். தயவு செய்து பேட்டை கையில் எடுங்கள். நீங்கள் தற்போது பயிற்சி அளிக்கிறீர்கள். விளையாடவில்லை" என குறிப்பிட்டு உள்ளார்.

வருத்தம்
மேலும், லாரா, பாண்டிங் எல்லாம் விளையாடும் போது தலைவன் அங்கே இருந்தும் விளையாடாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் பாடலாசிரியர் விவேக். சச்சின் அடுத்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மார்ச் மாதம் விளையாட உள்ளார். அதைக் காண தான் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











