கேஎல் ராகுலுக்கு மேலும் ஒரு ஆபத்து.. ரஞ்சியில் பட்டையை கிளப்பிய மற்றொரு தொடக்க வீரர்..வாய்ப்பு வருமா
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் செளராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தியது. இருப்பினும் கர்நாடகா கேப்டன் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய தொடக்க வீரராக வலம் வந்தவர் மயங்க் அகர்வால். இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதங்கள் உட்பட 1,488 ரன்கள் விளாசியுள்ளார்.
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது, மயங்க் அகர்வால் ஃபார்மில்லாமல் திணறினார். இதன் காரணமாக இளம் வீரர்களான கேஎல் ராகுல், சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கழற்றிவிடப்பட்ட மயங்க் அகர்வால்
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த மயங்க் அகர்வால், கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போதும் ரன்கள் சேர்க்க முடியாமலே இருந்தார். இதன் காரணமாக வழக்கம் போல் பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை கழற்றிவிட்டது. பின்னர் ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்டார்.

கேப்டன் மயங்க் அகர்வால்
இந்த நிலையில் ரஞ்சி டிராபி போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த மயங்க் அகர்வால், கர்நாடகா அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங் ஃபார்மையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மயங்க் அகர்வால், மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளார். அதேபோல் கர்நாடகா அணியை அரையிறுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

ரஞ்சி கோப்பை அரையிறுதி
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை எதிர்த்து செளராஷ்டிரா அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செளராஷ்டிரா அணி ஷெல்டன் ஜாக்சன் மற்றும் வசவடா ஆகியோரின் சதங்களால் 527 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய கர்நாடகா அணியில் மயங்க் அகர்வால் தனியாளாக போராடி இரட்டை சதம் விளாசினார்.

மயங்க் அகர்வால் கம்பேக்
இறுதியாக 249 ரன்களில் இருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ரஞ்சி டிராபி தொடரில் 82.50 சராசரியுடன் 990 ரன்களை மயங்க் அகர்வால் குவித்துள்ளார். இருப்பினும் அரையிறுதியில் கர்நாடகா அணி தோல்வியை சந்தித்தது. மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளதால், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மயங்க் அகர்வால் இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராகுலுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications