Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs CSK: சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றியதாக ரசிகர்கள் கொதிப்பு.. என்ன நடந்தது?

மும்பை: வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில், கிரிக்கெட் விதிகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிட்செல் சாண்ட்னருக்கு அடிபட்டது தோள் பட்டையில், ஆனால் அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூரை 'கன்கஷன்' எனப்படும் தலைக்காயத்துக்கான விதிமுறையைப் பயன்படுத்தி களம் இறக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இது திட்டமிட்ட வியூகமா அல்லது விதிகளில் இருக்கும் ஓட்டையை மும்பை அணி பயன்படுத்தியதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஆட்டத்தின் 17-வது ஓவரில் சிஎஸ்கே அணியின் கார்த்திக் சர்மா கொடுத்த கேட்ச்சை மிட்செல் சாண்ட்னர் டைவ் அடித்துப் பிடித்தார். அப்போது அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மைதானத்தை விட்டு வெளியேறிய சாண்ட்னர், தனது தோள்பட்டையில் ஐஸ் பேக் வைக்கப்பட்ட நிலையில் வலியால் துடித்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸின் போது அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூரை விளையாட அனுமதிக்குமாறு மும்பை அணி நிர்வாகம் நடுவர்களிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு அவர்கள் 'கன்கஷன்' விதியைக் காரணமாக்கினர்.

MI vs CSK IPL 2026 Controversy MI s Concussion Substitute Choice Sparks Debate Shardul Thakur Replaces Mitchell Santner

கிரிக்கெட் விதிமுறைப்படி, ஒரு வீரருக்குத் தலை அல்லது கழுத்துப் பகுதியில் பலத்த அடிபட்டு, அதனால் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரை (கன்கஷன் சப்ஸ்டிடியூட்) களம் இறக்க முடியும். ஆனால், சாண்ட்னருக்குத் தோள்பட்டையில் தான் அடிபட்டது என்பது கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. மேலும், விதியின்படி ஒரு வீரருக்குப் பதிலாக மாற்றப்படும் வீரர் அதே போன்ற திறமை கொண்டவராக இருக்க வேண்டும். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சாண்ட்னருக்குப் பதிலாக, வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை எப்படி நடுவர்கள் அனுமதித்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே, "சாண்ட்னர் கீழே விழுந்தபோது அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதி முதலில் தரையில் மோதியது. அதன் பிறகுதான் தோள்பட்டையில் அடிபட்டது. அவர் ஓய்வறைக்குத் திரும்பிய பிறகு தலைசுற்றல் இருப்பதாகக் கூறினார். அவர் சீராக இல்லாததால் தான் ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்றோம். நடுவர்களின் அனுமதியுடன் தான் ஷர்துல் தாகூரை விளையாட வைத்தோம்" என விளக்கம் அளித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இத்தகைய வியூகத்தை கையாண்ட போதிலும், அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 207 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி, பின்னர் பந்துவீச்சிலும் மிரட்டியது. குறிப்பாகச் சிஎஸ்கே அணியின் இம்பாக்ட் வீரராகக் களம் புகுந்த அகீல் ஹொசைன் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை நிலைகுலைத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த இந்த சர்ச்சை முடிவைத் தாண்டி, சிஎஸ்கே-வின் அபார ஆட்டமே நேற்றைய போட்டியின் பேசுபொருளாக அமைந்தது.

Story first published: Friday, April 24, 2026, 9:50 [IST]
Other articles published on Apr 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+