MI vs CSK: மீண்டும் ஏமாற்றிய தோனி.. சிஎஸ்கே பிளேயிங் 11 என்ன? ரோஹித் சர்மா நிலை இதுதான்
மும்பை: ஐபிஎல் தொடரின் 'எல் கிளாசிகோ' என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பிரம்மாண்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. ஆனால், மைதானமே அதிரும் வகையில் ஆரவாரம் செய்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐபிஎல் வரலாற்றின் இரு பெரும் அடையாளங்களான தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை என்ற செய்தி ரசிகர்களைப் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியான இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட அதே வீரர்களுடன் மும்பை அணி இன்று களம் காண்கிறது. ஆனால், தசைநார் காயத்தால் அவதிப்பட்டு வந்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் இடம் பெறவில்லை. இது மும்பை ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற வீரர்களை நம்பியே மும்பையின் பேட்டிங் வரிசை அமைந்துள்ளது.

மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் செய்ததால் தோனி இன்று நிச்சயம் விளையாடுவார் என அஸ்வின் உட்பட பலரும் கணித்திருந்தனர். ஆனால், டாஸ் போட வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி இன்று விளையாடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அவர் பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக அந்த ஜாம்பவான் இன்று நம்முடன் இல்லை. இருப்பினும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இன்று நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெறுவோம்" என்றார்.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், தேவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே என வலுவான பேட்டிங் வரிசையுடன் சிஎஸ்கே களம் இறங்குகிறது. வான்கடே மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்பதால், பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் 7 மற்றும் 8-வது இடங்களில் தவிக்கும் இந்த இரு அணிகளுக்கும் வெற்றி மிகவும் அவசியமானது. பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கப் போராடும் இந்த ஆட்டத்தில், ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சைச் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஜாம்பவான்கள் இல்லாத இந்த மோதலில் எந்த அணி வெற்றி வாகை சூடப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் 11):
சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், தேவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்நீத் சிங், முகேஷ் சவுத்ரி.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் 11):
குயின்டன் டி காக், நமன் திர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, கிரிஷ் பகத், ஏ.எம். கசன்ஃபர், அஸ்வனி குமார்.


Click it and Unblock the Notifications